உணவு பாதுகாப்புத்துறையின் சான்று பெறாத உணவு வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      ஈரோடு

ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவின் சார்பாக பொதுமக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும்பொருட்டு வியாபாரிகள் தங்களது வியாபார தொகைக்கு ஏற்ப உரிமம் அல்லது பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில்லரை விற்பனையாளர்கள்

ஆண்டுக்கு ரூ.12லட்சத்துக்கு மேல் வியாபாரம் செய்யும் சில்லரை விற்பனையாளர்கள், உரிம கட்டணமாக ஆண்டுக்கு ரூ.2ஆயிரமும், தயாரிப்பாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் நாள் ஒன்றுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு உட்பட்டதாக இருந்தால் ரூ.5 ஆயிரமும் கருவூலம் தொடர்புடைய வங்கியில் செலுத்த வேண்டும்.  இந்த விவரங்களை மாவட்ட நியமன அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலிலோ 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் உரிமம் பெற அடையாள அட்டை நகல், முகவரி உறுதி சான்றிதழ், தயாரிப்பு நிறுவனத்தின் வரைபட நகல், தயாரிப்புக்கு பயன்படுத்தும் இயந்திரங்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

30 நாட்களுக்கு முன்பாக

சில்லரை விற்பனையாளர்கள் உரிமம் பெற, அடையாள அட்டை நகல், முகவரி சான்றிதழ் நகல், மின் கட்டண அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.  ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் தங்களது காலாவதி தேதிக்கு 30 நாட்களுக்கு முன்பாக கருவூலத்தில் பணம் செலுத்தி உரிய ஆவணங்களுடன்  மாவட்ட நியமன அலுவலரிடம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.  தவறும்பட்சத்தில் உரிமத்தின் காலாவதி தேதிக்கு முந்தைய 30 நாட்களுக்கு முன்பிருந்து நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதமாக செலுத்த வேண்டும்.

பதிவுச் சான்றிதழ்

ஈரோடு மாவட்டத்தில் 16,785 அரசு மற்றும் தனியார் உணவு வணிகர்கள் உள்ளனர். நாளதுவரை 1,695  உணவு வணிகர்கள் உரிமம்,  7,076  உணவு வணிகர்கள் பதிவுச் சான்றிதழும் பெற்றுள்ளனர்.

 உணவு பாதுகாப்புத்துறையின் சான்று பெறாத உணவு வணிகர்கள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இதுவரை தகவல் ஈரோடு மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் சார்பில் எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளில் 298 மாதிரிகளில் 103 உணவு மாதிரிகள் சட்டத்திற்கு முரணானது என அறிக்கை பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதில் 35 வழக்குகளுக்கு  அபராத தொகையாக ரூ.3,49,750/- வசூலிக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 68 உணவு வணிகர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

பிளாஸ்டிக் அரிசி குறித்த ஆய்வு

மேலும் ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 82 குடோன்கள் மற்றும் கடைகளில் பிளாஸ்டிக் அரிசி குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பிளாஸ்டிக் அரிசி குறித்த விற்பனை எதுவும் ஆய்வில் கண்டறியப்படவில்லை என்றும் பிளாஸ்டிக் அரிசி குறித்த ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இது தொடர்பான புகார்கள் இருந்தால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்.0424-2223545 என்ற தொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர்   தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து