முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு விவகாரம்: சோனியாவுடன் பா.ஜ. தலைவர்கள் நாளை பேச்சுவார்த்தை

புதன்கிழமை, 14 ஜூன் 2017      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ஜனாதிபதி பதவிக்கு ஒருமித்த கருத்துடன் ஒருவரை தேர்வு செய்யும் முயற்சி நடைபெறுகிறது. இதுதொடர்பாக சோனியா காந்தியை பாரதிய ஜனதா தலைவர்கள் நாளை சந்தித்து பேசுகிறார்கள்.

ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூலை மாதம் 25-ம் தேதி புதிய ஜனாதிபதி பதவி ஏற்க வேண்டும். அதற்குள்ளாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடக்கவுள்ளது. இதற்காக நேற்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது.

ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சி சார்பாக வேட்பாளர் தேர்வு செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் வேட்பாளர் குறித்து ஆய்வு செய்து சிபாரிசு செய்ய பா.ஜ. சார்பாக ஒரு கமிட்டியை அமீத்ஷா நியமித்துள்ளார். இந்த கமிட்டியில் மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத் சிங், வெங்கய்யா நாயுடு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட 17 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அப்போது எதிர்க்கட்சிகளின் சார்பாக ஜனாதிபதி பதவிக்கு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிகள் சார்பாக 10 கொண்ட ஒரு துணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆளும் பா.ஜ. தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆகியவைகள் சார்பாக ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதி பதவிக்கு தேர்வு செய்வது குறித்து சோனியா காந்தி மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை பா.ஜ. குழுவினர் நாளை சந்தித்து பேச உள்ளனர் என்று அமைச்சர் வெங்கய்யா நாயுடுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா ஆகியோருடன் வெங்கய்யா நாயுடு ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களும் விரைவில் பா.ஜ. குழுவினரை சந்திக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி பதவிக்கு பல்வேறு பெயர்களை எதிர்க்கட்சிகள் சார்பாக முன்மொழிந்ததாக தெரிகிறது. இருந்தபோதிலும் பாரதிய ஜனதா சார்பாக வேட்பாளர் தேர்வு செய்த பின்னரே எதிர்க்கட்சிகள் சார்பாக முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. ஆனால் கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராஜ்யசபை காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளருக்கான பெயரை எந்தக்கட்சியும் கூறவில்லை என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து