முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கு கொண்டு இரத்தத்தை தானமாக வழங்க முன் வர வேண்டும் கலெக்டர் வீரராகவராவ் வேண்டுகோள்

புதன்கிழமை, 14 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

        மதுரை.-மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக இரத்த தான விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர்   கொ.வீர ராகவ ராவ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 இப்பேரணியானது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தொடங்கி அண்ணா பேருந்து நிலையம் வழியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு சென்றடைந்தது. 
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  செய்தியாளர்களிடம் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 உலக இரத்த கொடையாளர் தினம் இன்று (14.06.2017) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இரத்த தானம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அரசு இராசாசி மருத்துவமனை, தனியார் இரத்த வங்கிகள் சார்பில் மதுரையின் பல்வேறு இடங்களில் இரத்த தானத்தை பெறுவதற்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இளைஞர்கள் இரத்த தானத்தில் ஆர்வமுடன் பங்கு கொண்டு பல உயிர்களை காக்க உதவ முன் வரவேண்டும்.
    இரத்த தானத்தின் மூலம் பெறப்படும் பல்வேறு வகை இரத்தத்தின் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.  கடந்த 2016ம் ஆண்டு 24840 யூனிட்கள் இரத்தம் தானமாக பெறப்பட்டு, 60,000 அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் மதுரை மாவட்டத்தில் இதுவரை ரூ.261 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் இரத்தத்தை தானமாக வழங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  எனவே பொதுமக்கள் அனைவரும் இன்றைய இரத்த தான விழாவில் பங்கு கொண்டு இரத்தத்தை தானமாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
  முன்னதாக இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அரசு இராசாசி மருத்துவமனை இரத்த வங்கியில் தனது இரத்தத்தை தானமாக வழங்கினார்.  பின்னர் 153 முறை இரத்த தானம் வழங்கிய வி.எம்.ஜோஸ் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  பாராட்டு சான்றிதழை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் மதுரை இராசாசி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.மா.ரா.வைரமுத்துராஜு, துணை இயக்குநர் (மருத்துவப்பணிகள் - காசநோய்) மரு.ஏ.ஆர்.ராஜபிரகாஷ், இந்திய செஞ்சிலுவைச்சங்க துணை அவைத்தலைவர் வி.எம்.ஜோஸ், மாவட்ட திட்ட மேலாளர் (பொ) ப.ஜெயபாண்டி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து