முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி ஒரு நபர் வழங்கும் ரத்தமானது பலரின் உயிர் காக்க உதவியாக அமைகிறது கலெக்டர் வா.சம்பத், வழங்கி பேச்சு

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஆண்டு தோரும் 3 முறை இரத்த தானம் வழங்கிய இரத்த கொடையாளர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழை கலெக்டர் வா.சம்பத், நேற்று (15.06.2017) வழங்கினார். இது குறித்து கலெக்டர் வா.சம்பத், தெரிவித்ததாவது.

ரத்ததானம்

 

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதம் 14-ந்தேதி உலக இரத்த கொடையாளர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தினம் தன்னலம் இன்றி மற்றவரின் உயிர் காக்கும் நோக்குடன் மற்றவர்களின் நல்வாழ்விற்காக இரத்த தானம் வழங்கும் தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. "அதிகப்படியான இரத்த சேகரிப்பு அதிக பேரின் வாழ்வை பாதுகாக்கும்" என்ற மையக்கருத்துடன் இந்த ஆண்டிற்கான நிகழ்வுகள் சிறப்பிக்கப்படுகின்றன.

இளம் தலைமுறையினர் தங்களுடைய தன்னார்வ இரத்த கொடையின் வாயிலாக ஓர் மிகப்பெரிய இரத்த சேகரிப்பினை உருவாக்கி தேவைப்படும் எந்த நேரத்திலும் யாருக்கும் இரத்தம் பயன்படும் வகையில் உதவ வேண்டும். இந்த நாளில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வினை மக்களிடத்தில் ஏற்படுத்தி மேலும் பல இரத்தக்கொடையாளர்கள் இரத்த தானம் வழங்க முன்வர வழிவகுக்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும்.

தன்னார்வ இரத்த தானத்தை ஊக்குவிப்பதே இரத்த தேவையை பூர்த்தி செய்வதற்கான ஒரே வழி. உலக இரத்த கொடையாளர் தினத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 2 முறை மற்றும் 3 முறைக்கு மேல் இரத்ததானம் செய்த 85 பேரை பாராட்டி அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் இவ்விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

ரத்த கொடையாளர்

 

 

சேலம் மாவட்டத்தில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் இரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும் 2016-17 ம் ஆண்டில் நமது சேலம் மாவட்டத்திலுள்ள அரசு இரத்த வங்கிகளில் 147 முகாம்கள் மூலமாக 17,452 யூனிட் இரத்தம் பெறப்பட்டு பலரின் உயிர் காக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றும் சம்மேளனத்துடன் இணைந்து பாதுகாப்பான இரத்தம் கிடைக்கப் பெறவும் இளைஞர்களிடையே தன்னார்வ இரத்த தானத்தினை ஊக்குவிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தனி ஒரு நபர் வழங்கும் இரத்தமானது பலரின் உயிர் காக்க உதவியாக அமைகிறது. எனவே இந்த உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு ஒவ்வொருவரும் தன்னார்வமாக இரத்த தானம் வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத், தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.கனகராஜ் அவர்கள், மருத்துவ அலுவலர் எம்.ரவீந்திரன், துணை இயக்குநர், சுகாதாரபணிகள் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் மரு.க.பூங்கொடி அவர்கள் இணை இயக்குநர் (பொ) மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.வளர்மதி அவர்கள், துணை இயக்குநர், காசநோய் பிரிவு மரு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட திட்ட மேலாளர் தோ.கோபாலகிருஷ்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து