திருச்சி பெரிய மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில், பயின்று ஆரம்பகால கல்விக்காக செல்லும் குழந்தைகளுக்கு கல்வி சான்றிதழ்கள் : கலெக்டர் கு.ராசாமணி வழங்கினார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருச்சி
Trichy 2017 06 15

திருச்சி பெரிய மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில், அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்பகால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி. வழங்கினார்.

கல்வி சான்றிதழ்

குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கி மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் 2 இலட்சத்து 62 ஆயிரத்து 73 அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு முன் பருவக்கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் 13.06.2017 அன்று தொடங்கி வைத்தார்கள்.2016-2017ஆம் ஆண்டு சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை மானியக் கோரிக்கையில் இந்த நிதியாண்டு முதல் அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்பகால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1666 முதன்மை மையங்களும் 162 குறு மையங்களும்(கிராம ஊராட்சியில் 1360, பேரூராட்சியில் 129, நகராட்சியில் 44, மாநகராட்சியில் 295 மையங்களும்) மொத்தம் 1828 அங்கன்வாடிமையங்கள் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேசிய ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக் கொள்கை 2013ன் அடிப்படையில் அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி பாடத்திட்டத்தில், ஆடிப்பாடி விளையாடு பாப்பா என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநில அளவில் இந்த திட்டத்தை செய்படுத்துவதற்கு முன்பருவக் கல்வி உபகரணங்கள், பாடத்திட்டப் புத்தகங்கள், குழந்தைகளுக்கான செயல்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் ஆய்வுத் தாள்கள் ஆகியவற்றிற்காக ஆண்டுதோறும் 15 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. இச்சான்றிதழ்கள் வழங்குவதன் மூலம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கை அதிகரிக்கவும் இடைநிற்றலை குறைக்கவும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று(15.06.2017) திருச்சி மாவட்டம், பெரிய மிளகுபாறை அங்கன்வாடி மையத்தில், அங்கன்வாடி மையங்களில் பயின்று ஆரம்பகால கல்விக்காக வேறு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) புவனேஷ்வரி மற்றும் மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி மையபணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து