வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திறன் வளர்ப்பு பயிற்சி : கலெக்டர் ஆ.அண்ணாதுரை தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      தஞ்சாவூர்
Thanjai 2017 06 15

தஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களுக்கு கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் தொடர்பான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேற்று (15.06.2017) தொடங்கி வைத்தார்.

பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, பேசியதாவது,சுதந்திரம் அடைந்த பின் இந்தியா அரசின் சார்பில் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மறைந்த பாரத பிரதமர் ஜவகர்ஹலால் நேரு காலத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டங்கள் அனைத்து மேலிருந்து கீழ் நோக்கி திட்டங்கள் செயல்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டது. 1952ம் ஆண்டு கிராமத்தில் உள்ள தேவைகளை நிர்ணயிக்க கிராமத்தில் வருவாயையோ மாவட்டத்தில் வருவாயையோ மாநிலத்தில் வருவாய் மற்றும் தேவைகளை அறியாமல் தலைநகரங்களிலிருந்து திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையினை மாற்றி 73வது சட்ட முன்வடிவில் 74 சட்ட திருத்ததினை மேற்கொண்டு மத்திய, மாநில உள்ளாட்சி திட்டங்கள் என மூன்று வகைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கிராம உள்ளாட்சி என்பது ஒரு சிறிய ஜனநாயக அமைப்பு, அடுத்த நிலை வட்டார அமைப்பு, மாவட்ட ஊராட்சி, மாநில அமைப்பு, மத்திய அமைப்பு ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது,

கிராமத்தின் தேவைகளை அரசின் தேவையான திட்டங்களை தீட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தி வருகின்றது. பொதுவாக நம் தேவைகளை நாமே செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களுக்கு உருவாக்கி தன் கையே தனக்கு உதவி என்ற நிலையினை அடைய வேண்டும். அனைத்து தேவைகளையும் அரசை எதிர்பார்க்காமல், பொது மக்கள் தாங்களே செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.

சென்னை மாநகராட்சி போன்ற பெரிய மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டக்குழு, கல்வி குழு, சுகாதாரக் குழு போன்ற குழுக்கள் அமைக்கப்பட்டு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றது. அது போல் ஊராட்சிகளில் ஊராட்சி அளவில் குழுக்கள் அமைக்க பயிற்சி வகுப்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இப்பயிற்சியின் மூலம் கிராமத்தில் உள்ள வளங்களை அறிந்து திட்டங்களை திட்டமிட பயிற்சி அளிக்கப்படும். பொது மக்களுக்கும் ஊராட்சி அலுவலர்களுக்கும் ஒரு நல்ல உறவு ஏற்பட இத்திட்டங்கள் உதவியாக இருக்கும். நாம் அறிந்து கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது என மனதில் வைத்து பயிற்சி வகுப்பில் பயிற்சி மேற்கொண்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, பேசினார்.

இப்பயிற்சி 40 பேர்கள் கொண்ட ஒரு அணிக்கு இரண்டு நாட்கள் வீதம் 7 அணிகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.மந்திராசலம், மகளிர் திட்ட இயக்குநர் கு.இந்து பாலா, மாவட்ட ஊராட்சி செயலர் வி.வெங்கடாஜலபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து