சிற்பக்கலைக்கு மிகவும் புகழ் பெற்ற தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      ஆன்மிகம்
tharamangalam-kailasanathar

தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. சேலத்திலிருந்து 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்;ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம், ரதி மன்மதன் சிற்பம், கல் சங்கிலி, கல் தாமரை ஆகியவை வியப்புக்குரியவை.

இந்த கோயில் ஒரே நேரத்தில் கட்டப்பட்டதல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தது என்று கூறுகிறார்கள். 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலி என்பவர் இப்பகுதியை அரசாண்டு வந்தார். பசுக்கள் தினந்தோறும் மேய்ச்சலுக்கு செல்லும் போது ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தானாக பால் சொரிப்பதைக் கேள்விப்பட்ட கெட்டி முதலியார், அங்கு சென்று பார்த்து பரவசப்பட்டார். சுவாமி இங்கு எழுந்தருள்வதாக உணர்ந்து, இக்கோயிலை மேலும் விரிவுபடுத்திக் கட்டி, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர்.

பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். மகுடேறி மகுடசூடாவடி மன்னன் மணிமன்னன் வணங்கினும் வணங்காமுடி மன்னர் காலத்தில் தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றி 306 து164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டிலேயே கட்டப்பட்டது. ஆலயத்தின் முன்கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. ஒரு பெரிய தேரை குதிரைகளும், யானைகளும் இழுத்துச் செல்வதைப் போன்ற தோற்றத்தில் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது.

இது மேற்கு பார்த்த சிவன் கோவிலாக விளங்குகின்றது. எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் பட்டியக்கல் நிலை கோயிலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. ரதி சிலையிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியும் வகையிலும், மன்மதன் சிலையிலிருந்து பார்த்தால் ரதி தெரியும்படியும் அமைந்த சிற்பம் சிறப்பானது.  இந்த கோயிலில் உள்ள கல் சங்கிலி, கல் தாமரை, சிங்கம் ஆகியவை சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

மார்ச் 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுந்து காட்சியளிக்கிறது. இதனைக்காண அன்றைய தேதிகளில் கோயிலில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதும்.

இத்தலத்திலெயே வெகு சிறப்பான சன்னதி பாதாள லிங்கம். தலத்தின் கீழ் பகுதியில் சிறிதளது  காற்று கூட புக முடியாத அளவிற்கு இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்கு பச்சை கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்துவந்தால் மணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் தேடி வரும், குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் மற்றும் தொழில் முடக்கத்தில் உள்ளவர்களுக்கு தொழில் விருத்தி ஆகியவை கை கூடுகின்றன.

இத்தலத்தில் உள்ள ஜூரகேஸ்வரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு தருவதாகும். ஜூரகேஸ்வரருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடைமாலை சாத்தி அபிஷேகம் செய்து வந்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும்.

எண்கோண வடிவில் (எட்டு) அமைந்துள்ள தெப்பக்குளம் உள்ளது. இதன் ஒரு மூலையில் கல்லை எறிந்தால் அது எட்டு மூலைகளிலும் பட்டு மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேரும் வகையில் மிக விசித்திரமாக இக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலங்களில் மன்னர் போருக்குச் செல்லும் முன் இத்தெப்பக் குளத்திற்கு வந்து ஒரு கல்லை விட்டெறிவார். கல் எட்டு மூலையிலும் பட்டு பழைய இடத்திற்கே திரும்பி வந்தால் போரில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதிகம். அவ்வாறே வெற்றியும் கிடைத்திருக்கிறது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் வேஷ்டி சேலை வாங்கி படைப்பது, மஞ்சள் காப்பு, சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம் செய்யலாம். அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்துக்கு முக்கிய நேர்த்தி கடன்களாக உள்ளது.  இறைவக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரலாம். வசதி படைத்தவர்கள் தங்களின் வசதிக்கேற்ப அன்னதானம் மற்றும் கோயில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

இத்தலத்திற்கு வந்து வழிபட்டுச் சென்றால் வேண்டுவது நிறைவேறுகிறது.  திருமணம், குழந்தை பேறு, நிரந்தர வேலை, தொழில் அபிவிருத்தி, உத்தியோக உயர்வு, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பெருமளவில் வேண்டி நிறைவேற்றிக்கொள்கின்றனர்.

மூன்று தெருக்களை ஒட்டி நீண்ட மதிற்சுவருக்குள் கோயில் அமைந்துள்ளது.  உயரமான ஐந்து நிலை கோபுரம் வழியாக கோயில் உள்ளே நுழைந்தால் மூலவர் கைலாசநாதர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.  பிறகு அன்னை சிவகாம சுந்தரி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.  அவினாசியப்பருக்கு தனி சன்னதி உள்ளது. சுப்ரமணியருக்கும் தனி சன்னதி உள்ளது.  அர்த்த மண்டபத்தில் பாதாள லிங்கத்தை தரிசிக்க கட்டணம் செலுத்தி படிக்கட்டு வழியாக கீழே சென்று வணங்கிவருவது புதிய அனுபவமாகவும் உள்ளது.  சிவசக்தியின் வடிவங்களை கோபமாகவும் சாந்தமாகவும் சித்தரித்து இரு சிலைகளும் அருகருகே அமைக்கப்பட்டுள்ளன.

தைப்பூசம் தெப்பத்தேர் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுவர். கார்த்திகை, திருவாதிரை, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் கோயிலில் அலைமோதும். இவை தவிர வருடத்தின் முக்கிய விசேச தினங்களான தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தமிழ் ஆங்கில வருடப்பிறப்பு தினங்களிலும் கோயிலில் பக்தர்களின் வருகை ஆயிரக்கணக்கில் இருக்கும். இங்கு எழுந்தருளியுள்ள கைலாசநாதரை தரிசிப்போருக்கு ஆயிரம் லிங்கங்களை தரிசித்த பலன் கிடைக்கும்.

Agni Devi review | Bobby Simha | Madhoo | Ramya Nambeesan | Sathish

Embiran Movie Review | Rejith Menon | Radhika Preeti | Krishna Pandi

Tata Harrier 2019 SUV Full Review | In Depth Review - Pros & Cons | Thinaboomi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து