முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டார்ஜிலிங் போராட்டம்: தனி மாநிலம் கோரும் ஜி.ஜே.எம் தலைமையகத்தில் ராணுவம் குவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

டார்ஜிலிங், டார்ஜிலிங்கில் தனி மாநிலம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஜேஎம் கட்சியின் தலைமையகத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராணுவப் படை மூன்று கம்பெனி பிரிவுகளாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா கட்சி தலைமையில் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் அதன் தலைவர் பிமல் குருங் வீட்டில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
அப்போது பிமல் வீட்டில் இருந்து கூர்மையான ஆயுதங்கள், கத்திகள், வில், அம்புகள், பேஸ்பால் மட்டைகள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜிஜேஎம் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் மேற்கு வங்க அரசு, நிலைமையைக் கட்டுப்படுத்த டார்ஜிலிங்கிற்கு 7-க்கும் மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளை அனுப்பிவைத்தது. ஆனாலும் டார்ஜிலிங் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்றது. கடைகள், கல்வி நிலையங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் வன்முறை வெடித்தது. போலீஸார் பதற்றமான பகுதிகளில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தில் மலைப் பகுதியான டார்ஜிலிங், கலிம்போங் மற்றும் குர்சியாங் ஆகிய நகரங்களை உள்ளடக்கிய பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினர்.

இந்தச் சூழலில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வங்கமொழி கட்டாயமாக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த ஜிஜேஎம் அமைப்பினர் மாநில அரசைக் கண்டித்தும், மீண்டும் தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. இதையடுத்து கடந்த 12-ம் தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஜிஜேஎம் அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து