இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்: வாசன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      தமிழகம்
GK Vasan(N)

Source: provided

சென்னை : இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''தமிழ்நாடு மின்சார வாரியம் விவசாயத்திற்கு முற்றிலும் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்கும், சுயநிதி திட்டம் மூலம் முன்பணமாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் செலுத்துபவர்களுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2003 ஆம் ஆண்டு வரையில் மட்டுமே முற்றிலும் இலவசமாக மின்சாரம் வழங்கும் திட்டத்தின் படி மின் இணைப்பு வழங்கப்பட்டது.

அதே போல ரூபாய். 25 ஆயிரம் முன்பணம் செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு 2007 ஆம் ஆண்டு வரையும், ரூபாய். 50 ஆயிரம் முன்பணம் செலுத்தி 2011 ஆம் ஆண்டு வரை விண்ணப்பித்தவர்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் 16 ஆயிரம் பேர் மின் இணைப்புக்காக இன்னும் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


இச்சூழலில் மின் இணைப்பு கிடைக்காத 3 லட்சம் விவசாயிகள் டீசல் இன்ஜினை (மோட்டர் இயந்திரம்) பயன்படுத்தி பாசனம் செய்வதால் அதிக செலவாகிறது. கடந்த 15 முதல் 20 வருடங்களாக பாசனத்திற்கு இலவச மின்சாரம் கிடைக்காமல் காத்திருப்பதும், பாதிப்பதும் விவசாயிகள்தான். மேலும் டீசல் இன்ஜின் மூலம் ஆழ்குழாய் கிணறுகளில் சுமார் 50 அடி ஆழத்திற்கு கீழ் உள்ள தண்ணீரை எடுக்க முடியாத சூழலில் விவசாயிகள் கடன் வாங்கி, சுமார் 2 லட்சம் செலவு செய்து ஜெனரேட்டர் வாங்கி, அதன் மூலம் ஆழ்குழாய் கிண்றுகளில் மின் மோட்டாரை பொருத்தி தண்ணீர் இறைத்து பாசனம் செய்கின்றனர்.

ஜெனரேட்டரை இயக்குவதற்கு அதிக அளவில் டீசல் தேவைப்படுவதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முழுமையான மின்கட்டணம் செலுத்தி மலர் சாகுபடி செய்வதற்கு டேரிப் - III A ல் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளாகியும் இன்னும் மின் இணைப்பு கிடைக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.

தமிழகத்தில் குறிப்பாக திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தொழிலுக்கு மின் இணைப்புக் கிடைக்காமல், இலவச மின்சாரம் கிடைக்காமல், தடையற்ற மும்முனை மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் விவசாயத்தொழிலுக்கு முன்னுரிமைக் கொடுத்து, திட்டங்களை செயல்படுத்தி, தொடர் நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும், விவசாயத்தை நம்பி வாழ்கின்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.

எனவே இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கும், முன்பணம் செலுத்தியவர்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருப்போர்களுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் மற்றும் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து