முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை சி.பி.எம் அலுவலகம் மீது வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

கோவை : கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , "கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் கட்சிக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனம் மற்றும் அலுவலகத்தின் ஜன்னல் பகுதி சேதமடைந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தின் மீதான இத்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் உழைக்கும் மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண அணுகும் இடமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் கோவை மதக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட போதெல்லாம் மக்கள் ஒற்றுமைக்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளப்பரிய பங்காற்றியுள்ளது.

\கோவை மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமையையும், அமைதியையும் குலைக்க விரும்பும் சக்திகள் சமீப காலமாக அதிகரித்து வருவது கவலை தர தக்க அம்சமாகும். சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இதேபோன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தாக்கப்பட்டதும், கொடிக்கம்பங்கள் வெட்டப்பட்ட சம்பவங்களும் நடைபெற்று இருக்கின்றன.

காலை நேரத்தில் கட்சி அலுவலகத்தின் மீது நடைபெற்றுள்ள இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும், கோவையில் சமீப காலமாக தலைதூக்கியுள்ள இத்தகைய வன்முறை நடவடிக்கைக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.

தமிழகத்தின் ஜனநாயக இயக்கங்கள் இத்தகைய வன்முறை தாக்குதலுக்கு எதிராக உறுதியாக கண்டனக் குரலெழுப்ப வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்"  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து