மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      தமிழகம்
cm palanisamy(N)

சென்னை : மின்சாரம் தாக்கி உயிரிழந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-


திருநெல்வேலி மாவட்டம், பண்மொழி கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், வைகை அணை அலுவலகத்தில் கம்பியாளராகப் பணிபுரிந்து வந்த, தேனி மாவட்டம், மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த காட்டுராஜா மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஈரோடு - கோவை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பவானி அலுவலகத்தில் மஸ்தூராகப் பணியாற்றி வந்த, ஈரோடு மாவட்டம், வெள்ளித்திருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பணியின் போது, தவறி கிழே விழுந்து உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், தொரவி கிராமத்தைச் சேர்ந்த சந்தானம் மனைவி கனகாம்பரம் வீட்டிலிருந்து வெளியே சென்ற போது, அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சல்மான் மற்றும் பானுமா ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

வேலூர் - ராமநாதபுரம்

வேலூர் மாவட்டம், கெங்கசாணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் கொடிகம்பத்தை தொட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கருத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மனைவி பஞ்சவர்ணம் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த மேற்கண்ட எட்டு நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

கடல் அலையில் சிக்கி ...

கோயம்புத்தூர் மாவட்டம், சௌடேஸ்வரி நகரைச் சேர்ந்த திருமூர்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் வேளாங்கண்ணியில் கடலில் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திருமூர்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து