ஜவ்வாதுமலை வனப்பகுதியில் 19 கிலோ மீட்டர் தூரம் புதிய சாலைகள் அமைக்கப்படும்:கோடை விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை வனப்பகுதியில் 19 கி.மீ. தூரம் புதிய சாலைகள் அமைக்கப்படும் என ஜவ்வாதுமலையில் நடைபெற்ற கோடைவிழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்

ஜமுனாமரத்தூர் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 20வது ஆண்டு ஜவ்வாதுமலை கோடை விழா நேற்று விமர்சையாக தொடங்கியது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.


புதிய சாலைகள்

 

மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொ) சு.சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.வனரோஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனுவாசன் கோடை விழாவை துவக்கிவைத்து 6932 பயனாளிகளுக்கு ரூ. 14 கோடியே 35 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில்,

திருவண்ணாமலை, வேலூர் உள்ளடக்கிய ஜவ்வாதுமலை பகுதியில் 53 மலை கிராமங்கள் உள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேல்சோழங்குப்பம் - அத்தைவாடி வனப்பகுதியில் 11 கி.மீ. தூரம் புதிய சாலையும் மேல் செண்பகத்தோப்பு - கீழ்செண்பகத்தோப்பு வரையிலான வனப்பகுதியில் 8 கி.மீ. தூரம் வரை புதிய சாலையும் மொத்தம் 19 கி.மீ. 19 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் 2 புதிய சாலைகள் அமைக்கப்படவுள்ளது இதற்கான ஆய்வு பணி 3 நாட்களில் மேற்கொள்ளப்படும். ஜவ்வாதுமலையில் பழங்குடியின மாணவர்களின்கல்வித் தரம் உயர ரூ. 24 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி உண்டுஉறைவிடப்பள்ளி துவங்கப்படும். ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, கொல்லி மலை, ஆகிய 3 மலைப்பகுதிகளில் புதிய சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படும். ஜவ்வாதுமலை பகுதியிலிருந்து மலைவாழ் மக்கள் கூலித்தொழிலுக்காக செம்மரங்கள் வெட்ட ஆந்திரா போன்ற பகுதிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக பகுதியில் பாதுகாப்பில் புதிய சந்தன மரங்கள் வளர்க்கவும் தங்களை பொருளாதாரத்தில் உயர்த்திக்கொள்ளவும் வழிவகை செய்யப்படும். அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஜவ்வாதுமலையில் 1 லட்சத்து 60 ஆயிரம் சந்தன மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. வனத்துறை பகுதியில் பழங்குடியின மக்கள் நலனுக்காக மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோரிக்கை முகாம் நடத்தப்படும். அதன்மூலம் அவர்களது கோரிக்கை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும். வனத்துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிக்கு ஊக்கத்தொகையாக ரூ. 25 ஆயிரம் 2வது பரிசாக ரூ. 20 ஆயிரம், 3வது பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல் பிளஸ்2 பொதுத் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசுத்தொகையாக ரூ. 50 ஆயிரம் 2வது பரிசு ரூ. 30 ஆயிரம், 3வது பரிசு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும் மேலும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த (பழங்குடியினர்) படித்த இளைஞர்களுக்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அம்முகாம்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக ஜமுனாமரத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கோடை விழா நடைபெறும் வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வரை செல்லும் கோடை விழா பேரணியை அமைச்சர் செல்லூர் கே.ராஜு துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த வேளாண் துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சுற்றுலாத்துறை, செய்தி துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் கண்காட்சி அரங்களை திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டனர்.

நேற்று நடந்த இந்த தொடக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பன்னீர்செல்வம், தூசி கே.மோகன், கு.பிச்சாண்டி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, மாவட்ட வருவாய் அலுவலர் பி.ரத்தினசாமி , மாவட்ட வன அலுவலர் (வடக்கு) இரா.தன்னப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய தலைவர் அமுதா அருணாசலம், தண்டராம்பட்டு நிலவள வங்கி தலைவர் எஸ்.ஆர்.தருமலிங்கம், தி.மலை கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, ஜமுனாமரத்தூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் என்.வெள்ளையன், நம்மியம்பட்டு தொடக்க வேளாண் கூட்டறவு சங்க தலைவர் கோவிந்தராஜ், ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.பிரகாஷ், தனி அலுவலர் எல்.சீனுவாசன் உள்பட அனைத்து துறை அரசு அலுவலர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) எஸ்.குமாரி நன்றி கூறினார்.

இந்த விழாவையட்டி கலை பண்பாட்டுத்துறை சார்பில் பரத நாட்டியாலயா, சென்னை வழங்கும் பரதநாட்டியம், ராக்போர்ட் குழுவினரின் சிலம்பாட்டம் மற்றும் புலியாட்டம், போளூர் வெற்றி பீம் கலைக்குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆரணி தாய்நாடு கலைக்குழு கலைமுரசு காசிநாதன் குழுவினரின் ஆடல்பாடல், பள்ளிக்குப்பம் கலைவாணி நாடக மன்றம் வழங்கும் கொக்கிலி ஆட்டம் மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சி, காட்பாடி சாரல் கலைக்குழுவினரின் தப்பாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற பாடல்கள் நிகழ்ச்சியும் சுற்றுலா துறை சார்பில் நாட்டிய கலைஞர் நிவேதிதா பார்த்தசாரதி குழுவினரின் பரதநாட்டியம் சேரஸ் கலைகுழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.

இதேபோல ஜமுனாமரத்தூர் ஆலங்காயம் சாலை திறந்த வெளி மைதானத்தில் பாராசைலிங் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரையும் கோடை விழா மைதானத்தில் காவல்துறை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும் ஜமுனாமரத்தூர் ஏரியில் கண் கவர் வண்ணமயமான வானவேடிக்கை நிகழ்ச்சி மாலை 7 மணிமுதல் 8 மணிவரை நடைபெற்றது. இதேபோல மாவட்ட விளையாட்டு துறை சார்பில் வாலிபால், கபடி, தடகளம், நீளம்தாண்டுதல், குண்டு எரிதல் போன்ற நிகழ்ச்சிகளும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் மாணவர்கள் இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கோடை விழா நிறைவு விழாவின் 2ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்குகிறார், இதில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறந்த அரங்குகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து