கேரள மாநிலத்தில் கொச்சி முதல் திருப்புணித்துறா வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      இந்தியா
pm modi metro rail launch 2017 6 17

திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கொச்சி முதல் திருப்புணித்துறா வரையிலான மெட்ரோ ரெயில் போக்குவரத்தை  நேற்று கொச்சி ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

முதல் கட்டமாக ...

கேரளாவில் கொச்சியில் இருந்து திருப்புணித்துறா வரை மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இதில் முதல் கட்டமாக ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரையிலான 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் திட்டப்பணிகள் முடிவடைந்தன. இதையடுத்து இந்த பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்தது. இதற்கான தொடக்க விழா கொச்சி ஜவகர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் நேற்று நடந்தது.


பிரதமர் தொடங்கி வைத்தார்

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று மெட்ரோ ரெயில் போக்குவரத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து நேற்று காலை கொச்சி வந்தார். பகல் 11 மணிக்கு தொடக்க விழா நடந்தது. இதில் மத்திய அமைச்சர் வெங்கைய்யாநாயுடு, கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் மெட்ரோ ரெயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரெயிலில் பயணம்

மெட்ரோ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரெயிலில் பயணம் செய்தார். அவருடன், கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராய் விஜயன், மத்திய அமைச்சர் வெங்கைய்யாநாயுடு, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் கும்மணம் ராஜசேகரன் ஆகியோரும் சென்றனர். பின்னர் அதே ரெயிலில் அவர்கள் ஆலுவா திரும்பினார்.

பிரதமர் பாராட்டு

ரெயிலில் பயணம் செய்த போது, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மெட்ரோ ரெயில் திட்ட ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோரை பிரதமர் மோடி பாராட்டினார். மகத்தான சாதனையை செய்து முடித்து விட்டீர்கள் என்று கூறி வாழ்த்தினார். மெட்ரோ ரெயிலின் தொடக்க விழா நேற்று நடந்தாலும் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆலுவா முதல் பாலாரிவட்டம் வரை ரூ.40 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணியில்  திருநங்கைகள் ...

மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் முதல் முறையாக திருநங்கைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். டிக்கெட் வழங்க, துப்புரவு பணி செய்ய என முதல் கட்டமாக 23 பேர் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். திருப்புணித்துறா வரை மெட்ரோ ரெயில் ஓடும்போது 60 திருநங்கைகள் பணியில் இருப்பார்கள் என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாண்டிக்கு அழைப்பு இல்லை

கொச்சி மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் தொடக்க விழா உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது நடந்தது. அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, இப்பணியினை முடிக்க உம்மன்சாண்டி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். இப்போது முதல் கட்ட பணிகள் முடிந்து ரெயில் போக்குவரத்து தொடக்க விழா நடக்கும் நிலையில், விழாவில் பங்கேற்க உம்மன்சாண்டிக்கு அழைப்பு கொடுக்கவில்லை.

வருத்தம் இல்லை

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைக்காததில் எனக்கு வருத்தம் இல்லை. கேரளா மக்கள் நினைத்தால் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியும் என்பதற்கு கொச்சி மெட்ரோ ரெயில் திட்டமே உதாரணமாகும். இன்று (நேற்று)நான் வேறு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். எனவே இன்னொரு நாளில் நான், மெட்ரோ ரெயிலில் மக்களுடன் மக்களாக பயணம் செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேக் இன் இந்தியா திட்டம்

மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பின்னர் நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:-

“ மேக் இன் இந்தியா திட்டத்தை ரயில் பெட்டிகள் பிரதிபலிக்கிறது. சென்னை அருகே உள்ள தொழிற்சாலைகளில் இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய மூலப்பொருட்கள் 70 சதவீதத்தை கொண்டு ரயில் பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.   மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பெண்கள், 23 மூன்றாம் பாலினத்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கொச்சி நகரில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2021-ல் 23 லட்சமாக இங்கு மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நகர்புற உள்கட்டமைப்புகளில் அதிகரித்து வரும் அழுத்தத்தை குறைப்பதற்கு இது போன்ற விரைவான போக்குவரத்து அவசியம். கொச்சி பொருளாதார வளர்ச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்களிக்கும். நகரத்தின் மொத்த பொது போக்குவரத்து அமைப்பை ஒரே சிஸ்டம் கீழ் கொச்சி மெட்ரோ ஒருங்கிணைக்கும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து