முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக கோப்பையை வெல்லுமா?

சனிக்கிழமை, 17 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இன்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

‘டாப்-8’ நாடுகள்

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. இங்கிலாந்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் ‘டாப்-8’ நாடுகள் பங்கேற்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றன.

இறுதியில் இந்தியா - பாக்.

கடந்த 12-ம் தேதியுடன் ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. ‘ஏ’ பிரிவில் இருந்து இங்கிலாந்து, வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும் அரை இறுதிக்கு முன்னேறின. கடந்த 14-ந் தேதி நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 15-ந் தேதி நடந்த 2-வது அரை இறுதியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

3-வது முறையாக ...
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. கோப்பையை வெல்வதற்கான இந்தப் போட்டியில் வீராட் கோலி தலைமையிலான இந்தியா - சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வெல்லுமா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே 2 முறை ...

ஏற்கனவே 2002-ம் ஆண்டில் கங்குலி தலைமையிலான அணி இலங்கையுடன் இணைந்து கூட்டாக கோப்பையை பெற்றது. 2013-ல் டோனி தலைமையிலான அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது.தற்போதுள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலத்துடன் திகழ்கிறது. குறிப்பாக பேட்டிங்கில் அதிகம் பலம் பெற்று காணப்படுவதால் கோப்பையை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.

தவான் முதலிடம்

மேலும் பாகிஸ்தானை ‘லீக்’ ஆட்டத்தில் 124 ரன்னில் வென்று இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. தொடக்க ஜோடி முத்திரை பதிக்கும் வகையில் விளையாடி வருகிறது. தவான் ஒரு சதம், 2 அரை சதத்துடன் 317 ரன்கள் குவித்து இந்தப் போட்டித் தொடரில் முதல் இடத்தில் உள்ளார். சராசரி 79.25 ஆகும். அதிகபட்சமாக இலங்கைக்கு எதிராக 125 ரன் எடுத்துள்ளார். இதே போல ரோகித்சர்மா 4 ஆட்டங்களில் 304 ரன் எடுத்துள்ளார். 1 சதமும், 2 அரை சதமும் அடங்கும். ஒரு ஆட்டத்தில் ஆட்டம் இழக்காததால் சராசரி 101.33 ஆகும். அதிகபட்சமாக வங்காளதேசத்துக்கு எதிராக 123 ரன் எடுத்தார்.

மாற்றம் இல்லை

இதே போல கேப்டன் வீராட் கோலியும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளார். அவர் 3 அரை சதத்துடன் 253 ரன் எடுத்துள்ளார். இது தவிர யுவராஜ்சிங், ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், டோனி ஆகியோரும் அதிரடியை வெளிப்படுத்த கூடியவர்கள். பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார் (6 விக்கெட்), பும்ரா, ஜடேஜா மற்றும் அஸ்வின் நல்ல நிலையில் உள்ளனர். இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 ஆட்டத்தில் விளையாடிய வீரர்களே இடம் பெறுவார்கள்.

பாக். ஆர்வம்

இந்திய அணி இந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று (இலங்கைக்கு எதிராக) இருந்தது. இதனால் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற முடியும் என்ற வேட்கையில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி ‘லீக்’ ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்று இருந்ததால் அதற்கு பதிலடி கொடுத்து முதல்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. இந்தியாவை போல அந்த அணியும் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று இருந்தது.

முகமது அமீருக்கு வாய்ப்பு?

பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் சர்பிராஸ் அகமது, தொடக்க வீரர்கள் அசார் அலி, பக்தார் ஜமான் மற்றும் பாபர் ஆசம் நல்ல நிலையில் உள்ளார். இதுதவிர முன்னாள் கேப்டன்கள் சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். உடல் தகுதி பெற்றதால் வேகப்பந்து வீரர் முகமது அமீர் இன்று இடம் பெறுவார். காயம் காரணமாக அவர் அரை இறுதியில் விளையாடவில்லை. சுழற்பந்து வீரர்களில் ஹசன் அலி நல்ல நிலையில் உள்ளார்.
இரு அணி வீரர்களும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடுவார்கள் என்பதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ஸ் டெலிவி‌ஷன்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா வீரர்கள்:

வீராட் கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ஷிகர் தவான், யுவராஜ்சிங், டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, கேதர் யாதவ், ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர்குமார், பும்ரா, உமேஷ்யாதவ், முகமது ‌ஷமி, தினேஷ்கார்த்திக், ரகானே.

பாக். வீரர்கள்:

சர்பிராஸ் அகமது (கேப்டன்), அசார் அலி, பக்தார் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், இமாத் வாசிம், பகீம் அஸ்ரப், முகமது அமீர், ஹசன்அலி, ஜூணைத்கான், அகமது ஷேசாத், ரயீஸ், ஹாரீஸ் சோனகல், சதாப் கான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து