முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரகத நாணயம் திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர்-ஆதி,நடிகை-நிக்கி கல்ராணி, இயக்குனர்-சரவணன் ஏ ஆர் கே, இசை    திபு நின்னான் தாமஸ், ஓளிப்பதிவு- ஷங்கர் பி வி, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு எதிரிகளிடம் போரிட்டு வெற்றியும் அடைகிறார்.

மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார்.இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள்.

இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது.இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார்.இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான்.

மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை.

இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார்.ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆதி தனக்கேற்றவாறு கதையை தேர்வு செய்து அதில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு படத்தில் எல்லா இடத்திலும் இவரது நடிப்பு பலே சொல்ல வைத்திருக்கிறது. படத்தில் நிறைய கதாபாத்திரங்கள், தன்னைவிட மற்ற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்படியான காட்சிகள் இருந்தும், தைரியமாக இக்கதையை தேர்வுசெய்த ஆதியை பாராட்டியே ஆகவேண்டும்.

நிக்கி கல்ராணி வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரத்தை திரையில் பார்க்கும்போதுதான் அந்த வித்தியாசம் நமக்கு தெரிய வரும். இந்த மாதிரி கதாபாத்திரத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல நடிகைகள் யோசிப்பார்கள்.

ஆனால், நிக்கி கல்ராணி தைரியமாக இந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.படத்தில் ரொம்பவும் ஹைலைட்டான விஷயம் ராமதாஸின் செய்யும் சேட்டைகள்தான். இவர் அடிக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரே சிரிப்பலையில் அலறுகிறது. ஆதியின் நண்பனாக வரும் டேனியலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம். ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்து காமெடியில் கலக்கியிருக்கிறார். இவர்களுடன் அருண்ராஜ் காமராஜும் தன் பங்குக்கு காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக, இவர் ஆடும் ஆட்டம் எல்லாம் ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருக்கிறது.

ஹைடெக் வில்லனாக வரும் ஆனந்த்ராஜை பார்த்தாலே நமக்கெல்லாம் சிரிப்பு வந்துவிடுகிறது. அவர் வில்லத்தனமாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு காமெடியாகவே தெரிகிறது. அவருடைய அனுபவ நடிப்புக்கு இந்த படத்தில் நல்ல தீனி கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் ஆகியோர் சில காட்சிகளே வந்தாலும் நிறைவாக செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள். இயக்குனர் சரவன் இப்படியொரு வித்தியாசமான கதையை எப்படி யோசித்தார்? என்பதுதான் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.

பேன்டசி என்றொரு விஷயத்தை வைத்துக்கொண்டு படத்தில் இப்படியெல்லாம் பேன்டசியை புகுத்த முடியுமா? என்று பலரையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார். படத்தில் எந்தவொரு காட்சியும் வீண் என்று சொல்லமுடியாத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் மெனக்கெட்டு எடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும், எல்லா கதாபாத்திரங்களும் மனதில் பதியும்படி, அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் பலமே திரைக்கதைதான்.

கதையோடு ரசிகர்களை கட்டிப்போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையை பாராட்டாமல் இருக்கவே முடியாது.பி.வி.சங்கரின் ஒளிப்பதிவு படம் முழுக்க கலர் புல்லாக இருக்கிறது. கதையின் ஓட்டத்தை தடை செய்யாத அளவுக்கு இவரது ஒளிப்பதிவு கச்சிதமாக அமைந்துள்ளது சிறப்பு. திபு நைனன் தாமஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் கதையோடு ஒட்டியே பயணித்திருக்கிறது.

பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும், பின்னணி இசையில் தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கிறார். பிரசன்னாவின் எடிட்டிங்கும் காட்சிகளை கோர்வையாக அமைத்திருக்கிறது. இதனால், படம் பார்த்துவிட்டு வெளிவந்த பிறகும் படத்தின் தாக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. மொத்தத்தில் ‘மரகத நாணயம்’ மதிப்பு அதிகம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து