தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
rain 2017 5 28

சென்னை : குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தென் ஆந்திர கடலோர பகுதி முதல் தென் தமிழக கடலோர பகுதி வரை உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலைகொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்து உள்ளது. குறிப்பாக நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்புவனத்தில் 8 சென்டிமீட்டர் அளவுக்கு கூடுதல் மழை பெய்தது. மேலும், சிவகங்கை, திருமங்கலத்தில் தலா 4 செ.மீ., திருப்பத்தூர், சித்தம்பட்டி, சிதம்பரம், கந்தர்வக்கோட்டை, கீரனூர், மணல்மேல்குடியில் தலா 3 செ.மீ., மேலூர், வலங்கைமான், தொண்டி, திருவாடனை, சோழவந்தான், காரைக்குடி, மருங்காபூரி, கும்பகோணம், பாபநாசம், பரங்கிப்பேட்டை, வல்லத்தில் தலா 2 செ.மீ., இலுப்பூர், ஆர்.எஸ்.மங்கலம், மதுரை தெற்கு, மதுரை விமானநிலையம், முத்துப்பேட்டை, அரிமளம், ஒரத்தநாடு, திருமயம், நன்னிலம், அணைக்காரன்சத்திரம், பேராவூரணி, தஞ்சாவூர், அறந்தாங்கி, வேதாரண்யம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, பாண்டவிளை தலைப்பு, அதிராமபட்டிணம் ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து