மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது - தம்பிதுரை பரபரப்பு பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
Thambidurai 2017 6 18

சென்னை : அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விட்டு முதல்வராகும் மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என்றும் நடக்காத ஒன்றுக்கு சி.பி.ஐ விசாரணை தேவையற்றது என்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின்னர் அதிமுக அம்மா அணி கொள்கைப்பரப்பு செயலாளரும் மக்களவை துணைசபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்தார்.

தி.மு.க. செயல்தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சென்னை ராஜ்பவனில் காங்கிரஸ் தலைவர்களுடன் சென்று கவர்னர் வித்யாசகர் ராவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான வீடியோ ஆதாரத்தை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

கவர்னருடன் சந்திப்பு:-


இந்த நிலையில், மக்களவை சபாநாயகரும், அண்ணா தி.மு.க. அம்மா அணியின் கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரை நேற்று காலை 11 மணிக்கு சென்னை ராஜ்பவனில் கவர்னர் வித்யாகர் ராவை சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணிநேர சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

விசாரணை தேவையில்லை:-

கவர்னர் வித்யாசாகர் ராவ் என்னுடைய நண்பர், மரியாதை நிமித்தமாகவே கவர்னரை சந்தித்தேன். கட்சித்தாவல் தடைச்சட்டம் இருப்பதால் பணம் வாங்கி கொண்டு வாக்களிக்கவும் முடியாது. பேரம் பேசவும் முடியாது. அப்படி மீறி வாக்களித்தால் பதவி பறிபோய் விடும். அதிமுக எம்எல்ஏக்கள் பணம் வாங்கவும் இல்லை. பேரம் பேசவும் இல்லை. குதிரை பேரமெல்லாம் நடக்கவில்லை. அப்படி பேட்டிக்கொடுத்ததாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்கள்  சரவணனும் கனகராஜூம் தாங்கள் பேட்டியளிக்கவில்லை என்று மறுத்து விட்டனர். எனவே இது குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை. இல்லாத ஒன்றுக்கு எதற்காக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அ.தி.மு.க.வில் அணிகள் என்பதே கிடையாது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தனி அணியாக செயல்பட முடியாது. மீறி செயல்பட்டால் பதவி பறிபோய்விடும் என்பது அவர்களுக்குத் தெரியும். சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம்.

எப்படியும் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது தான் மு.க.ஸ்டாலினின் எண்ணம். எம்.ஜி.ஆரின் ஆட்சியையும் அப்படித்தான் கலைக்கப்பட்டது. இந்த ஆட்சி முழுமையாக நான்காண்டுகள் நீடிக்க வேண்டும் என்று தான் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார், மானியக்கோரிக்கைகள் சட்டமன்றத்தில் சிறப்பாக நிறைவேற்றப்படுகின்றன. மு.க.ஸ்டாலினின் ஆசை தேவையற்ற ஆசை. முதல்வராக மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது.

அதிமுகவில் பிளவு எதுவும் இல்லை. நான் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவன். அதேபோல் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தான். அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன அவ்வளவுதான். அதிமுக ஆட்சி நான்காண்டுகள் முழுமையாக நீடிக்கும். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுகவே வெற்றி பெறும். ஜெயலலிதாவின் அரசை கலைக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. மைனாரிட்டியாக இருந்தபோது திமுகவே ஆண்டபோது மெஜாரிட்டியாக இருக்கும் நாங்கள் ஏன் ஆளமுடியாது.

நட்பு அரசு:-

மத்திய பா.ஜ. அரசு எங்களுடைய நட்புக்குரிய அரசாக இருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து கழக முன்னோடிகளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முடிவெடுப்பார்கள். ஒ.பன்னீர்செல்வம், இணைப்பு பேச்சுவார்த்தைக்கான குழுவை கலைத்து விட்டாலும் நாங்கள் கலைக்கவில்லை. இணைப்புக்கான பேச்சுவார்த்தை நீடிக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தம்பிதுரையை தொடர்ந்து பா.ஜ.வின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான ஆடிட்டர் குருமூர்த்தி ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து