இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல் : எல்லை தாண்டி வந்ததாக 5 மீனவர்களை கைது செய்தது

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      தமிழகம்
India-Fishermen 2017 6 18

ராமநாதபுரம் : எல்லை தாண்டி வந்ததாக தங்கச்சிமடம் மீனவர்கள் 5பேரை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்துள்ளது.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்பட்டிருந்த தடைநீங்கிய நிலையில் கடந்த 14-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். கடந்த காலங்களை போல அல்லாமல் இந்த ஆண்டு தடைகாலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காததால் கவலை அடைந்துள்ளனர்.  இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரை பகுதியில் இருந்து வழக்கம்போல 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நெடுந்தீவுக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த அருமைநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகினை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் படகில் இருந்த அருமைநாதன் மகன் ரஞ்சன்(வயது40), ரிச்சர்ட் மகன் ராஜபாலன், யாகுளம் மகன் எவிரோன்,மண்குண்டு சிவலிங்கம் மகன் நவநீதன், ராஜேந்திரன் மகன் முத்துக்குமார்(32) ஆகிய 5 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர் படகினையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

காங்கேசன் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைத்தனர். அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் முடிவில் காங்கேசன் துறைமுக கோர்ட்டில் 5 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி 5மீனவர்களையும் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 5 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். தடைகாலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
.......................


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து