ராம்நாத் கோவிந்த் ஒரு முன்மாதிரியான ஜனாதிபதியாக விளங்குவார்: மோடி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      இந்தியா
modi(N)

புதுடெல்லி, ராம்நாத் கோவிந்த் ஒரு முன்மாதிரியான ஜனாதிபதியாக விளங்குவார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா சார்பாக வரும் 23-ம் தேதிக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அந்த கட்சியின் தலைவர் அமீத்ஷா தெரிவித்திருந்தார். அதன்படி அந்த தேதிக்கு முன்னரே பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பீகார் மாநில கவர்னராக இருக்கும் ராம்நாத் கோவிந்த் அந்த கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்று ஜனாதிபதியாக பதவி ஏற்பது உறுதியாகி விட்ட நிலையில் அவரை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து கூறியுள்ளார். ராம்நாத் கோவிந்த் ஒரு முன் மாதிரியான ஜனாதிபதியாக விளங்குவார் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். ஏழைகள், அனாதைகள், வாழ்வின் விளிம்பில் இருப்பவர்களுக்காக ராம்நாத் கோவிந்த் எப்போதும் போல் குரல் கொடுப்பார். வேட்பாளர் பெயரை அறிவிக்கும் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிமன்றக்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தேசிய ஜனநாயக முன்னணி சார்பாக ஜனாதிபதி பதவிக்கு கோவிந்த், வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் மோடி இதை தெரிவித்துள்ளார். சட்டத்துறையில் சிறந்து விளங்கிய கோவிந்த், ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கோவிந்துக்கு இருக்கும் அரசியல் சட்ட அறிவானது நாட்டிற்கு பலன் அளிக்கும். தூய்மையான பின்னணியில் இருந்து வந்த கோவிந்த், பொதுவாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்ததோடு  ஏழைகளுக்காக பாடுபாட்டு வருபவர். இதை அவர் தொடர்ந்து செய்வார் என்று உறுதியாக கூறுகிறேன் என்றும் பிரதமர் மோடி அந்த டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியுள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் கோவிந்த். 71 வயதாகும் கோவிந்த், உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலஙகளவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். சுப்ரீம்கோர்ட்டு வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். அதேசமயத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இவருக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து