தமிழகத்தில் 135 பால் பொருட்கள் தரம் குறைந்தவை: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      தமிழகம்
TN assembly 2017 06 02

Source: provided

சென்னை :   தமிழகத்தில் 135 பால் பொருள் தரம் குறைந்தது என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாகவும்,  இந்த பாலை குடிப்பவர்களுக்கு புற்றுநோய் உள்பட பல நோய்கள் வரும் என்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இதையடுத்து, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் கலப்பட பால் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.


அதில், பால்வளத்துறை அமைச்சர் கூறியது போல ரசாயனம் பாலில் கலக்கப்பட்டது என்பது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் , சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும், 886 பால் மாதிரிகள் எடுக்கப்பட்டது.

அதில் 18 மட்டும் தரம் குறைந்தவை. இதற்காக தொடரப்பட்ட வழக்கில், சம்மந்தப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 143 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 81 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பால் பொருட்களில் 338 மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் 135 தரம் குறைந்தது என்று கண்டறியப்பட்டு, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரூ.20 ஆயிரம் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர தரம் குறைந்த பால், பால் பொருட்களை விற்பனை செய்த 83 பேர் மீது சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 56 பேருக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பால் தரம் குறைந்தது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் தலைமையில் 14 பேர் கொண்ட குழு மாநில அளவிலும், கலெக்டர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து