முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்னேரியில் யோகாவின் நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்களின் யோகா சாகச விழிப்புணர்வு பேரணி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      சென்னை
Image Unavailable

பொன்னேரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாவின் நன்மைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் பள்ளி மாணவர்கள் நடத்திய யோகா சாகச விழிப்புணர்வு பேரணி பொது மக்களை மெய் சிலிர்க்க வைத்தது. பொன்னேரியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் ஜூன் 21ஆம் நாள் கொண்டாடப்படும் மூன்றாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மாணவர்களின் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

யோகா

இதில் ட்ராக்டர்களில் பேரணியாக சென்ற மாணவர்கள் அதில் பொருத்தப்பட்டிருந்த ஜன்னல் கம்பிகள், ஊஞ்சல், கயிறுகளில் தொங்கியவாறு பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் கயிறு பிடித்து தொங்கியவாறே சூரிய நமஸ்காரம், சிரசாசனம், விருச்சிகாசனம், சக்ராசனம், ஏகபாதாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து சாகசங்களை நிகழ்த்தியது பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்தது. யோகாசனங்களை தொடர்ச்சியாக செய்வதால் தங்களுக்கு ஞாபக சக்தி அதிகரித்து தேர்வெழுத உதவுவதாகவும், ரத்த ஓட்டம் சீரடைவதாகவும், உடலை நோய் அண்டாதவாறு செம்மையாக வைத்திருப்பதால் தொடர்ந்து யோகா செய்து வருவதாகவும் இந்த பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் தெரிவித்தனர்

பள்ளியில் தொடங்கிய இந்த பேரணி திருவேங்கடபுரம், பொன்னேரி பேருந்து நிலையம் வழியே சுமார் 5 கி.மீ. அளவில் முக்கிய வீதிகள் சென்று பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் யோகா குறித்த விழுப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியபடியாக மாணவர்கள் சென்றனர். ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான யோகாசனங்களை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்க முடியும் எனவும், மன அழுத்தத்தினை குறைத்து மனதிற்கு அமைதியை கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பாக பெண்களுக்கு மாத விலக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப்படுகிறது என்றும் இதன் ஏற்பாட்டாளரான யோகா பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.

யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் ஆண்டில் ஏதேனும் ஒரு நாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையில் வலியுறுத்தியதை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பரில் ஜூன் 21 ஆம் நாளை சர்வதேச யோகா நாளாக அறிவித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து