பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு எதேச்சதிகாரமானது: சீதாராம் யெச்சூரி பேட்டி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      இந்தியா
sitaram yechurry(N)

புதுடெல்லி : பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவித்திருப்பது எதேச்சதிகாரம் என்று கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்படுவார் என்று பாரதிய ஜனதா தலைவர் அமீத்ஷா தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் அ.தி.மு.க.,தெலுங்குதேசம், ராஷ்ட்ரீய சமீதி உள்பட பல்வேறு கட்சிகளின் ஆதரவை பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார்.  இதுகுறித்து இடது கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாரதிய ஜனதா சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில கவர்னர் ராம்நாத் கோவிந்த்தை அறிவித்திருப்பது பாரதிய ஜனதாவின் எதேச்சதிகாரமாகும். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய வரும் 22-ம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது என்றார். நாட்டின் வரலாறை மனதில் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி இல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் ஒரு தடவையைத் தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டி நிலவியது. ஜனாதிபதியாக ஆந்திராவை சேர்ந்த நீலம் சஞ்சீவ ரெட்டி மட்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடந்த 1977-ம்  ஆண்டில் இருந்து 1982-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருந்தார்.

தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஜனாதிபதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளை மீண்டும் கலந்தாலோசிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு என்னிடம் தெரிவித்தார். இது அவர்களுடைய எதேச்சதிகாரமான முடிவாகும். எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 22-ம் தேதி நடக்கிறது. அப்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்து ஏற்பட முயற்சி செய்யப்படும் என்றும் சீதாராம் யெச்சூரி மேலும் கூறினார்.  


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து