தென்காசியில் வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை: கணவர் உட்பட 7 பேருக்கு வலை

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      திருநெல்வேலி

தென்காசியில் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த கணவர் உட்பட 7 பேரை தென்காசி மகளிர் போலீஸார் வலை வீசி தேடிவருகின்றனர்.

 தென்காசியை அடுத்த கடையநல்லூர் பால அருணாசலபுரம் கிராமம், காலணி தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி என்பவரது மகள் வீரலெட்சுமி (வயது30) இவர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சங்கரன்கோவில் தாலுகா சின்ன வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் ராஜ்குமார் (வயது36) என்பவருக்கும் கடந்த 25.05.2014 ல் சங்கரன்கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக 30 பவுண் தங்கநகைகள், 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பாத்திரங்கள் மற்றும் 50 ஆயிரம் ரொக்கமும் ராஜ்குமாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

வேறு பெண்ணுடன் தொடர்பு

இவர்களுக்கு 01.03.2015 ல் ஹாசினி என்ற பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ராஜ்குமாருக்கு சென்னை, ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த வனஜா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இதையறிந்த வீரலெட்சுமி இதுபற்றி ராஜ்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதனால் ராஜ்குமாருக்கும் வீரலெட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை பற்றி வீரலெட்சுமி ராஜ்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

சித்ரவதை

ஆனால் ராஜ்குமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்து இருந்ததால் அவர்கள் அனைவரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன்பின் அவர்கள் அனைவரும் வீரலெட்சுமியிடம் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது. என்று மிரட்டியதோடு வீரலெட்சுமிக்கு எதிராகவும் செயல்படத் தொடங்கினார்கள். வீரலெட்சமியின் தங்கநகைகளை அடகு வைத்து பணத்தை கைப்பற்றியுள்ளார்கள். அதன்பின் ராஜ்குமார் மற்றும் அவரது தாயார் பொண்ணுத்தாய், உறவினர்கள் ராணி,சரஸ்வதி, ஜெயலெட்சுமி, கணேசன், முருகேசன், ஆகியோர்கள் வீரலெட்சுமியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்த தொடங்கியுள்ளார்கள்.

மிரட்டல்

இதுபற்றி வீரலெட்சுமி தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரில் . தனது உறவினர்கள் மூலம் பலமுறை ராஜ்குமாரை அழைத்து பேச முயற்சி மேற்கொண்ட நிலையிலும் ராஜ்குமாரும் மேற்கண்ட அவரது உறவினர்களும் மேலும் 3 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் ராஜ்குமாருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கிறோம்.அப்படி சேர்ந்து வாழும் நிலையிலும் வனஜாவை பற்றி எதுவும் பேசக்கூடாது. என்றும் நிபந்தனை விதித்துள்ளார்கள். இந்நிலையில் வீரலெட்சுமி இதுபற்றி வனஜாவிடம் போனில் பேசியுள்ளார். அப்போது வீரலெட்சுமி எனக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. எனவே நீ எனது கணவரை விட்டு பிரிந்துவிடு எனது வாழ்வில் குறுக்கிடாதே என்று  கேட்டுள்ளார் அதற்கு வனஜா தனக்கு 20 லட்ச ரூபாய் கொடுத்தால் ராஜ்குமாரை விட்டு பிரிந்து செல்ல தான் தயார் என்றும் கூறியுள்ளார்.   

போலீசில் புகார்

எனவே என்னிடம் அதிக வரதட்சனை கேட்டு என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்ததோடு, என்னை எனது கணவரோடு சேர்ந்து வாழ பெரும் தடையாக இருக்கும் எனது   கணவர் ராஜ்குமார், மற்றும் ராஜ்குமாரின் தாய் பொண்ணுத்தாய், மற்றும் அவரது உறவினர்கள் ராணி, சரஸ்வதி, ஜெயலெட்சுமி, கணேசன், முருகேசன் மற்றும் அவரோடு கள்ளத்தொடர்பு வைத்துள்ள வனஜா,ஆகியோர் மீது உரிய நடடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு வீரலெட்சுமி தனது புகார் மணுவில் கூறியுள்ளார்.

போலீசார் விசாரணை

இந்த புகாரை பெற்றுக்கொண்ட தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து வீரலெட்சுமியின் கணவர் ராஜ்குமார், மற்றும் ராஜ்குமாரின் தாய் பொண்ணுத்தாய், மற்றும் அவரது உறவினர்கள் ராணி, சரஸ்வதி, ஜெயலெட்சுமி, கணேசன், முருகேசன் மற்றும் அவரோடு கள்ளத்தொடர்பு வைத்துள்ள வனஜா,ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து