முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளராக, பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு - ஆதரவு கோரினார் பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 19 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பா.ஜ.க சார்பில் போட்டியிடும்  ஜனாதிபதி வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை ஆதரிக்கும்படி பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களை வலியுறுத்தினார். அ.தி.மு.க விடமும் அவர் ஆதரவை கோரினார்.
ஜூலை மாதத்துடன் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து ஜனாதிபதி  தேர்தல் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

ஆலோசனைக் கூட்டம்

முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளரை இறுதி செய்வது தொடர்பாக பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் டெல்லியில் நேற்று  நடந்தது. சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர், பாஜக ஜனாதிபதி வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டார். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

23-ம் தேதி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ராம்நாத் கோவிந்த் வரும் 23-ம் தேதி தாக்கல் செய்வார் என அமித் ஷா அறிவித்தார். பாஜகவின் தேர்வு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வேட்பாளர் தேர்வை அனைவரும் ஒப்புக்கொள்வர் என நம்புவதாகவும் அவர் கூறினார். ராம்ராத் கோவிந்த் ஒரு தலித் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பயணத்துக்கு முன்..

பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு வரும் 24-ம் தேதி தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார். அதற்கு முன்பாக பாஜக ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட வேண்டும் என கட்சி மேலிடம் முடிவு செய்தது. அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்காக அமைக்கப்பட்ட அமித் ஷா, அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத்சிங் ஆகியோர் அடங்கிய குழுவினர் பாஜக வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.

ஆதரவு கோரினார்

ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பிறகு  ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு அளிக்குமாறு,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரிடம் தொலைபேசி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு கோரினார்.
பிரதமரின் கோரிக்கையை ஏற்று  தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் தெலுங்கனா முதல்வருமான சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.  ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா தெரிவித்துள்ளது.

ஒரிரு நாளில் ....

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் அடுத்த மாதம் 25-ம் தேதி முடிகிறது. அதற்கு முன்னர் ஜூலை 17-ம் தேதி புதிய ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடக்கிறது.காங்கிரஸ் மற்றும எதிர்கட்சிகளி்ன்  சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் சோனியாவை  மத்திய அமைச்சர்கள்  அருண் ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ராஜ்நாத்சிங் ஆகியோர்  சந்தித்து பேசினார்கள். ஆனால் காங்கிரஸ் அதுபற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ஒரிரு நாளில் இது குறித்து காங்கிரசும்  முடிவு எடுத்து அறிவிக்க உள்ளது.

வாழ்க்கை குறிப்பு

ராம்நாத் கோவிந்த் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத்தில் அக்டோபர் 1 1945-ல் பிறந்தார். தலித் பின்னணியைக் கொண்டவர். ராம்நாத் கோவிந்த் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். டெல்லி உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றியிருக்கிறார். மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக இவர் பணியாற்றியிருக்கிறார்.
1994-ம் ஆண்டுதான் அவர் அரசியலில் அடியெடுத்துவைத்தார். முதன்முதலாக உத்தரப் பிரதேசத்திலிருந்து 1994-ல் அவர் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக இருமுறை அதாவது 2006-ம் ஆண்டுவரை அவர் எம்.பி.,யாக பணியாற்றினார். தனது பதவிக்காலத்தின்போது கிராமப்புறங்களில் கல்விக்கான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக அடிக்கடி குரல் கொடுத்திருக்கிறார். அவரது குரலின் எதிரொலியாக உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களின் பல்வேறு பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகள் கட்டப்பட்டன.

வகித்த பதவிகள்..

இதுதவிர பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினராகவும் அவர் செயல்பட்டுள்லார். தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சமூக நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக அவர் செயல்பட்டிருக்கிறார். 2002 அக்டோபரில் நடந்த ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் அவர் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து