முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவம்பர் மாதம் சர்வதேச நீதிமன்ற நீதிபதி தேர்தல்: இந்தியா சார்பில் தல்வீர் பண்டாரி மீண்டும் போட்டி

புதன்கிழமை, 21 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

நியுயார்க். வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள சர்வதேச நீதிமன்ற (ஐசிஜே) நீதிபதி பணியிடங்களுக்கான தேர்தலில், இப்போதைய நீதிபதி தல்வீர் பண்டாரி இந்தியா சார்பில் மீண்டும் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை நீதித்துறையின் முக்கிய அங்கமான சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டு வருகிறது. இதில் 15 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்தல் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐ.நா. பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் போட்டியிட்ட தல்வீர் பண்டாரி (69) நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் 2018 பிப்ரவரி மாதம் முடிய உள்ளது.

இந்நிலையில், நீதிபதி பணியிடங்களுக்கான அடுத்த தேர்தல் நவம்பரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 3 ஆகும்.

இந்தத் தேர்தலில், தல்வீர் பண்டாரியை மீண்டும் களமிறக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அவரது சார்பில் ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸிடம் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் மேலும் 9 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.

நீதிபதி பண்டாரி, தனது பதவிக் காலத்தில், கடல் தொடர்புடைய தகராறுகள், அன்டார்டிகா திமிங்கில வேட்டைத்தொழில், இனப் படுகொலை குற்றம், தீவிரவாதத்துக்கு நிதியுதவி உள்ளிட்ட 11 முக்கிய சர்வதேச வழக்குகளில் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பண்டாரி, சர்வதேச நீதிமன்ற நீதிபதியாவதற்கு முன்பு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றி உள்ளார். கடைசியாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பதவி வகித்தார்.

இந்திய கடற்படை முன்னாள் ஊழியர் குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தண்டனையை நிறைவேற்ற இந்த நீதிமன்றம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து