முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் விவசாயிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் கடன் தள்ளுபடி

புதன்கிழமை, 21 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூர், கர்நாடக மாநிலத்தில் விவசாய கடன் தலா ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.

நாடு முழுவதும் கடன் தொல்லையால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரூ.32 கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து மகாராஷ்டிரா மாநிலத்தில்  விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்திலும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநில முதல்வர் அமீர்ந்தர் சிங் அறிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்திலும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். எதிர்க்கட்சிகளும் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரஸ் அரசை வற்புறுத்தி வந்தன. இதனையொட்டி கர்நாடக மாநில விவசாயிகளின் விவசாய கடனில் ரூ.50 ஆயிரத்தை தள்ளுபடி செய்து மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா நேற்று சட்டசபையில் அறிவித்தார். இதனால் கூட்டுறவு விவசாய சங்கத்தில் கடன் வாங்கியுள்ள 22 லட்சத்து 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் அரசுக்கு 8 ஆயிரத்து 165 கோடி கூடுதலாக செலவாகும் என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் பெரும் கஷ்டத்தில் இருக்கிறார்கள். அதனால் விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரினர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். இருந்தபோதிலும் அதை தாங்கிக்கொண்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சித்தராமையா மேலும் கூறினார்.

கர்நாடக மாநில விவசாயிகள் மொத்தம் 52 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன்கள் வாங்கி உள்ளனர். இதில் 10 ஆயிரம் கோடி அளவுக்குத்தான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கி உள்ளனர். மீதமுள்ள 40 ஆயிரம் கோடிக்கு தேசிய வங்கிகளில் விவசாயிகள் கடன் வாங்கி உள்ளவர். இந்த கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சித்தராமையா கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து