உடுமலைப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு

புதன்கிழமை, 21 ஜூன் 2017      திருப்பூர்
13a

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் இன்று (21.06.2017) ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி    ஆய்வு மேற்கொண்டார்.                 

சேவை மைய கட்டிடம்

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னவீரம்பட்டி ஊராட்சியில் நாகவள்ளி குட்டை முதல் அய்யம்பாளையம் வரை பிரதான மந்திரி கிராம் சதக்யோஜனா திட்டத்தின் மூலம்  ரூ.41.35 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன் சாலையில் இருபக்கவாட்டுகளையும் சரியான முறையில்  பலப்படுத்திட வேண்டும் மற்றும் பணி நடைபெறும்போது பொறியாளர் கண்காணித்திட வேண்டுமென தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, குறுஞ்சேரி ஊராட்சியில் ரூ.17.00 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை பார்வையிட்டதுடன் அங்கிருந்த பொது மக்களிடம் கிராம வளர்ச்சிக்கு இவ்வளாகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியதுடன், பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

மரக்கன்றுகள்

பின்னர், பெரியகோட்டை, கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சியில் ரூ.3.80 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளை பார்வையிட்டதுடன் அதே பகுதியில் ரூ.9.67 இலட்சம் மதிப்பீட்டில் மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன், அதிக அளவில் மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க வேண்டுமென பணியாளர்களிடம் அறிவுரை வழங்கினார்.

கனரா வங்கி

அதனைத்தொடர்ந்து,  போடிப்பட்டி ஊராட்சியில் ரூ.4.61 இலட்சம் மதிப்பீட்டில் ஊரக வளாச்சித்துறையின் மூலம்  மரக்கன்றுகள் வளர்த்து பிற துறைகளுக்கு வழங்கும் மையத்தை பார்வையிட்டதுடன், வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை அதிக நாள் இருப்பில் வைக்காமல் உரிய கால கட்டத்தில் பிற இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கேற்ப அனுப்பி வைத்திட வேண்டுமெ தெரிவித்தார். பின்னர், அதே  வளாகத்தில் இயங்கி வரும் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கனரா வங்கியின் மூலம் அலகுகலைப் பயிற்சி வழங்கி வருவதை மாவட்ட கலெக்டர்  பார்வையிட்டதுடன் பயிற்சி பெறும் பெண்களிடம் நன்றாக தெரிந்து கொண்டு சுயதொழில் உருவாக்கிக் கொள்ள எல்லோரும் முன் வர வேண்டுமென தெரிவித்தார். பின்னர், போடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்று கிராம நிர்வாக அலுவலரின் பதிவேடுகளை பார்வையிட்டதுடன், பொது மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி    அறிவுறுத்தினார்.

 இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார்,
 ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பிரேம்குமார்  மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,   அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து