முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: கட்டிட வரைபட அனுமதி இனி 30 நாளில் கிடைக்கும் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்த 66 புதிய அறிவிப்புகள்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : கட்டிட வரைபட அனுமதி கோரி மனுக்கள் அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதி வழங்கப்படாமல் இருந்தால், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதி, விதிகளுக்குட்பட்டு நில உரிமையாளர் மற்றும் கட்டுநர்கள் பணி துவங்க அனுமதிக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று உள்ளாட்சி துறை சார்பில் அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

காலதாமதம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் 2-வது நாளாக சட்டசபையில் நேற்று நடைபெற்றது. இதில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், இன்பசேகரன் ஆகிய தி.மு.க உறுப்பினர்களும் சேகர், தி.நகர் சத்யா உள்ளிட்ட அ.தி.மு.க உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த விவாதங்களுக்கு பதிலளித்து உள்ளாட்சி துறை சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

திட்டம் மற்றும் கட்டிட அனுமதி பெறுவதில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்கு இரு வேறு துறைகளில் அதாவது வீட்டு வசதித்துறையிடம் திட்ட அனுமதியும், உள்ளாட்சி துறையிடம் கட்டிடட அனுமதியும் பெறுவதில் பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுவதோடு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசிடம் கடனுதவி பெற்று கட்டிடம் கட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இது குறித்து முதல்வர் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களுடன் கலந்து பேசினார். அதன் அடிப்படையில், பொதுமக்களின் இன்னல்களைக் களைந்து எளியவகையில் உரிய காலக்கெடுவிற்குள் 1 திட்டம் மற்றும் கட்டிட அனுமதி பெறவேண்டும் என்ற உயரியநோக்குடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைப்படியும். உரியசட்டத் திருத்தங்கள் மேற்கொண்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு திட்ட அனுமதி மற்றும் கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரம் மாற்றி கூடுதலாக அளிக்கப்படும்.

அதிகாரப் பகிர்வு

உள்ளாட்சி அமைப்புகளால் குடியிருப்பு கட்டிடங்களுக்கு 4000 சதுர அடி வரையில் திட்ட அனுமதி வழங்கும் தற்போதுள்ள அதிகாரப் பகிர்வினை கூடுதலாக உயர்த்தி கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும். மேலும், வணிகக் கட்டிடங்களுக்கு, 2000 சதுர அடிவரையில் திட்ட அனுமதி வழங்கும் தற்போதுள்ள அதிகாரப் பகிர்வினை கூடுதலாக உயர்த்தி வணிகக் கட்டிடங்கள், பொது கட்டிடங்கள் மற்றும் சிறப்பு கட்டிடங்கள் கட்ட அனுமதி உள்ளாட்சிகளுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படும். வழங்க 28 மனைகள் வரை, மனை உட்பரிவு அனுமதி வழங்க சென்னை பெரு நகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நகரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளதைப்போல மற்ற நகரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் வழங்கப்படும்.

இணையதளம் மூலமாக ...

கட்டிட வரைபட அனுமதி கோரும் மனுக்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். கட்டிட வரைபட அனுமதி கோரும் மனுக்கள் அளிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதி வழங்கப்படாமல் இருந்தால், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதி, விதிகளுக்குட்பட்டு நில உரிமையாளர் மற்றும் கட்டுநர்கள் பணி துவங்க அனுமதிக்கப்படும்.

பல அடுக்கு வாகன நிறுத்தம்

ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் தியாகராய நகரில், பாண்டி பஜார் - தியாகராய சாலையில் பாதசாரிகள் வளாகம் அமைக்கும் பணி, சென்னை தியாகராய சாலையிலுள்ள பாண்டி பஜார் பகுதியில் அகலமான நடைபாதை, மையத்தடுப்பான், பேருந்து மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு தனிப்பட்ட தடங்கள், பேட்டரிகார் வாகனப்பாதை, பொதுமக்கள் இளைப்பாறுவதற்கான இருக்கைகள், நவீனக் கழிப்பறைகள், சுத்தமான குடிநீர் மற்றும் முதலுதவி மையங்களுடன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் சீர்மிகு நகர நிதி மூலம் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பாதசாரிகள் வளாகம் அமைக்கப்படும். சென்னை தியாகராய நகரில் உள்ள தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் 1.488 சதுர மீட்டர் பரப்பளவில், 2 கீழ்தளம். தரைதளம் மற்றும் 5 மேல்தளம் கொண்ட பல அடுக்கு வாகன நிறுத்த கட்டிடம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்புடன் சீர்மிகு நகர நிதி மூலம் ரூ.36.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதில் சுமார் 500 இரு சக்கர வாகனங்களும். 200 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தலாம். சென்னை தியாகராய நகரில் உள்ள தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் ரூ.36.50 கோடி திட்ட மதிப்பீட்டில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்.  பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டிடங்களின் மேற்கூரையில் ரூ.39 கோடி திட்ட மதிப்பீட்டில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைக்கப்படும்.

சூரிய மின் உற்பத்திக்கு ...

சென்னை மாநகராட்சியின் கட்டிடங்களில் சூரிய மின் உற்பத்தி தகடுகள் அமைப்பதன் மூலம், நாள் ஒன்றிற்கு 5.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சூரிய சக்தியால் உற்பத்தியாகும் மின்சாரம் ஆண்டிற்கு 88 லட்சம் யூனிட்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டம். ரூ.39 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி நிதியின் மூலம் செயல்படுத்தப்படும். சென்னை மாநகராட்சியில், வாகனம் நிறுத்தும் இடங்களை வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தின் கீழ், பொது மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் ஒருங்கிணைந்த நிர்வாக அமைப்பு உருவாக்கி செயல்படுத்தப்படும்.

ஸ்மார்ட் கார்டு அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பூங்காக்களில் மக்கள் மற்றும் மாநகராட்சியின் பங்களிப்புடன் கழிவுநீரை நவீன முறையில் சுத்தப்படுத்தி பூங்காக்களில் பயன்படுத்தப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 2 பூங்காக்களில், நவீன முறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் பங்களிப்புடன் இத்திட்டம் மேலும் விரிவுபடுத்தி பல பூங்காக்களில் செயல்படுத்தப்படும். சென்னையில் வசிக்கும் மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில், மாநகர பேருந்து போக்குவரத்துக் கட்டணம், மின் கட்டணம், சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி ஆகியவற்றை சிரமமின்றி விரைவாக செலுத்தும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஸ்மார்ட் கார்டு  அறிமுகப்படுத்தப்படும்.

வாடகை கழிவுநீர் ஊர்திகள்

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில், நுகர்வோரின் வசதிக்காக அவர்களது ஆற்றலையும். நேரத்தையும் சேமிக்கும் விதமாக புதிய குடிநீர் கழிவுநீர் இணைப்புகளை பெறுவதற்கான விண்ணப்பத்தினை எளிதாக இணையதளம் மூலம் பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல் மற்றும் கண்காணித்தல் முறை கொண்டுவரப்படும். விரிவாக்கப் பகுதிகளில் உள்ள வீடுகளின் மூலம் வெளியேற்றப்படும் கழிவு நீரானது, சேகரிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு தனியார் கழிவுநீர் ஊர்திகளின் மூலம், அதிக கட்டணத்தில் பல இடங்களில் அகற்றப்பட்டு வருகிறது. எனவே, தற்போது பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விரிவாக்கப் பகுதிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவு நீரை அகற்றி, அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தால் குறைந்த கட்டணத்தில் வாடகை கழிவுநீர் ஊர்திகள் ஏற்பாடு செய்யப்படும்.

ரூ.226 கோடி மதிப்பில் ...

தற்போது கொடுங்கையூர், கோயம்பேடு, நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடி ஆகிய இடங்களிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீரானது சுத்திகரிக்கப்பட்டு, அருகிலுள்ள நீர் வழித் தடங்களில் விடப்படுகிறது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய விதி முறைகளின்படி. கழிவு நீரை சுத்திகரிக்க ஏதுவாக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.226 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும்.

சிறப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பணிபுரிந்து வரும் துப்புரவுப் பணியாளர்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளிலுள்ள தெருக்களில் சேரும் குப்பைக் கழிவுகள், தூசி மணல்கள், சந்தை மற்றும் பேருந்து நிலையங்களில் சேரும் திடக்கழிவுகளை அகற்றுதல், மழைநீர் வடிகால்களில் தேங்கும் அடைப்புகளை நீக்குதல் போன்ற அத்தியாவசிய அடிப்படைப் பணிகளை சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு பொது மக்களின் சுகாதாரத்திற்காக செய்து வருகின்றனர். இது போன்ற துப்புரவுப் பணிகளால் துப்புரவு பணியாளர்களுக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. ஆகவே, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்துவரும் துப்புரவு பணியாளர்களுக்கு நகராட்சி நிதியின் கீழ் “சிறப்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டம்”செயல்படுத்தப்படும்.

புதிய கட்டிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சில நகராட்சி அலுவலகங்கள், தற்போது பழைய கட்டிடங்களில் போதுமான வசதியின்றி இயங்கி வருகின்றன. எனவே, மூலதன மானிய தொகையின் மூலம் எடப்பாடி, நாகர்கோவில், திருமங்கலம் மற்றும் கும்பகோணம் ஆகிய 4 நகராட்சிகளில் ரூ.17 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டிடங்கள் கட்டும் பணிகளும் மற்றும் கரூர் நகராட்சியில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கூடுதல் அலுவலகக் கட்டிடம் கட்டப்படும். கொடைக்கானல், பரமக்குடி, சின்னமனூர், சாத்தூர், திருவண்ணாமலை, தேனி, புதுக்கோட்டை மற்றும் வேதாரண்யம் ஆகிய 8 நகராட்சிகள் மற்றும் மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களுக்காக ரூ.26.50 கோடி திட்ட மதிப்பீட்டில் துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்படும்.

பசுமை பூங்காக்கள்

தமிழ்நாட்டில் 25 நகரங்களில் 153 பசுமை பூங்காக்கள் ரூ.75.51 கோடி மதிப்பீட்டில், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் அமைக்கப்படும். கும்பகோணம் நகராட்சியின் மொத்த பரப்பளவான 12.58 சதுர கிலோ மீட்டரில் 9.44 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி மற்றும் நகராட்சியில் விடுபட்டுள்ள தெருக்களில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் ரூ.55.10 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1,66,562 நபர்கள் பயன்பெறுவர். கும்பகோணம் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ.55.10 கோடி திட்ட மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்கப்படும். ராஜபாளையம் நகராட்சியில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் அட்டல் நகர்ப்புர புத்துணர்வு மற்றும் நகர்ப்புர மாற்றத்திற்கான திட்டத்தின் கீழ் ரூ.258.25 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 1,55,000 நபர்கள் பயன்பெறுவர். போடிநாயக்கனூர் நகராட்சியில் ஜெர்மன் மேம்பாட்டு தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் ரூ.70.10 கோடி மதிப்பீட்டில், குடிநீர் அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் 79,000 நபர்கள் பயன்பெறுவர்.
செங்கல்பட்டு நகராட்சியில் ரூ.124.98 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி  மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும். இதன் மூலம் 72,000 பேர்  பயன்பெறுவர்.  இவ்வாறு அந்த அறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள் :
* தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டிக்கான பணிகள் 2020-ல் நிறைவடையும்.
* தமிழகத்தில் 25 நகரங்களில் ரூ.75.51 கோடியில் 153 பசுமை பூங்காக்கள் அமைக்கப்படும்.
* தி.நகரில் ரூ.36.50 கோடியில் பல அடுக்கு வாகனம் நிறுத்த கட்டடம் அமைக்கப்படும்.
* தமிழகத்தில் ரூ.85 கோடியில் 1000 அங்கன்வாடி மையங்கள்.
* ஆம்பூர் நகராட்சியில் அம்ருத் திட்டத்தில் ரூ.205 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்.
* ராஜபாளையத்தில் ரூ.258.25 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்.
* சென்னையில் வரி, கட்டணம் செலுத்த ஸ்மார்ட் கார்டு அறிமுகம் செய்யப்படும்.
* தமிழகத்தில் ரூ.250 கோடியில் 2 லட்சம் தடுப்பணைகள் கட்டப்படும்.
* பாண்டிபஜார் - தியாகராயநகர் ரூ.20 கோடியில் பாதசாரிகள் வளாகம் அமைக்கப்படும்.
* சென்னையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.226 கோடி செலவில் புனரமைக்கப்படும்.
* சென்னை மாநகராட்சி கட்டட மேற்கூரையில் ரூ.39 கோடியில் சூரிய மின்உற்பத்தி தகடுகள் பொருத்தப்படும்.
* ரூ.1,326 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டிக்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.
* நெம்மேலியில் 150 மில்லியன் லி. கடல்நீரை குடிநீராக்கி விநியோகம் செய்ய 1,258 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
* கடல்நீரை குடிநீராக்கும் திட்ட விரிவாக்கம், சேர்வாய் கண்டிகை நீர்தேக்க திட்டம் நவம்பருக்குள் முடிக்கப்படும்.
* ரூ.300 கோடியில் சிறு ஏரி, குளங்களின் கரைகள் பலப்படுத்தப்படும்.
* ஊரக பகுதிகளில் ரூ.200 கோடியில் எல்இடி விளக்குகள் பொருத்தப்படும்.
* ரூ.85 கோடியில் 1,000 அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும்.
* ரூ.25 கோடியில் 50 ஆயிரம் விவசாயிகளின் நிலங்களில் உரக்குழிகள் அமைத்துத்தரப்படும்.
* ஊரக பகுதிகளில் ரூ.400 கோடியில், 2500 கி.மீ இணைப்பு சாலைகள் மேம்படுத்தப்படும்.
* ரூ.50 கோடியில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டப்படும்.
* வாய்க்கால், ஓடைகள் மற்றும் கால்வாய்கள் குறுக்கே 2 லட்சம் தடுப்பணைகள் கட்டப்படும்.
* திண்டிவனம் நகராட்சியில் ரூ.230 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.
* கோவை மாநகராட்சியில் வெள்ளலூர் உரக்களத்தில் திடக்கழிவு மேலாண்மை செயலாக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து