முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா வழியில் நடக்கும் இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையும் கலாச்சாரமும் - பண்பாடும் பாதுகாக்கப்படும் - முதல்வர் எடப்பாடி உறுதி

புதன்கிழமை, 21 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஜெயலலிதாவின் வழியில் நடக்கும் இந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையும், கலாச்சாரமும் - பண்பாடும் பாதுகாக்கப்படும் என்று நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா பாதை

அதிமுக அம்மா அணியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை நந்தம்பாக்கம் தொழில் மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது. முதல்வரும் அதிமுக அம்மா அணியின் தலைமைக்கழக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த ஆண்டு இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டு, இஸ்லாமிய சமூகத்தினர் மீது, தான் கொண்ட பேரன்பைக் காட்டி, நம்மை எல்லாம் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆழ்த்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நன்றியோடும், அன்போடும் வணங்குகிறேன். மதச் சார்பின்மையிலும், சிறுபான்மை சமூகங்களை பாதுகாத்து, ஊக்கப்படுத்துவதிலும் அனைவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த பொதுசெயலாளர் ஜெயலலிதா வழியிலும் எம்.ஜி.ஆர் வகுத்தளித்த பாதையிலும் கழகமும், கழகஅரசும் தொடர்ந்து நடைபோடும் என்ற உறுதிமொழியை இந்த இனிய நிகழ்ச்சியில் நான் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் மீது நம்பிக்கை; தொழுகை; இல்லாதோர்க்கு ஈகை; ரமலான்நோன்பு; மெக்கா புனிதப் பயணம் என்னும் இஸ்லாமியப் பெருமக்களின் ஐந்து பெரும் சமயக் கடமைகளில் ஒன்றான ரமலான் புனித மாதத்தின்நோன்புக் கடமை சொல்லற்கரிய பெருமையும், மகத்துவமும் வாய்ந்தது.

விருந்துகளில் வீணாகும் உணவு

மாற்றார் பசி அறிந்து, நம்மிடம் உள்ளதை அவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்கும் சகோதரத்துவ பண்பு வளர முதலில் நாம் பசியின் தன்மையைஉணர வேண்டும். ஏராளமான வளங்களையும், செல்வங்களையும் இறைவன்மனித இனத்திற்கு வாரி, வாரி வழங்கியுள்ளார். இருந்தபோதிலும் எல்லோரும் பசியாற உணவு உண்கின்ற நிலையை மனிதனால் உருவாக்கமுடியவில்லை. வீடுகளிலும், விருந்துகளிலும் வீணாகிப்போகின்ற உணவுக்கு அளவில்லை; அதே நேரம் எவ்வளவுதான் பாடுபட்டு உழைத்தாலும் வயிராற உணவு உண்ணும் நிலை நமக்கு இல்லாமற்போய்விட்டதே என்று பலகோடி பேர் பரிதவிக்கும் நிலைமை உலகெங்கும் இருப்பதை காண முடிகிறது.

இஸ்லாத்தின் மாண்பு

இந்த துயரத்திற்கு முடிவுகட்டி, பசி, பஞ்சம், பட்டினி, இல்லாத ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் அதற்கு அடிப்படையானது சகோதரத்துவ உணர்வும், சமயக் கட்டளைகளை இறைஅச்சத்துடன் நிறைவேற்றும் கடமையும் அடிப்படையான தேவைகளாகும் என்றால் அது மிகையாகாது. எனவேதான், இறை தூதர் நபிகள் இந்த ரமலான் மாதத்தின்நோன்பினை இறைவனோடு நமக்கு புனித உறவை ஏற்படுத்தும் பந்தம்என்று போற்றினார். தனக்கு என்னென்ன நன்மைகள் எல்லாம் நிகழவேண்டும் என்று ஒருவர் ஆசை கொள்கிறாரோ அவை அனைத்தும் நம்மைச் சுற்றி வாழும் எல்லோருக்கும் நிகழ வேண்டும் என்ற சகோதர அன்பு உள்ள ஒருவரைத்தான் இறை நம்பிக்கை உடையவராக ஏற்க முடியும் என்று இறை தூதர் நபிகள் நாயகம் எடுத்துரைத்தார். திருக்குரான் அருளப்பட்ட மாதம் என்பதால் புனிதமான மாதமாகப் போற்றப்படும் ரமலான் மாதத்தில் நோன்புக் கடமையை நிறைவேற்றக் கூறுவதன் மூலம் நோன்பின் மாண்பை இஸ்லாம் நமக்கு வலியுறுத்திக்கூறுகிறது.

பாதுகாக்கப்படும்

ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்டு அவரது வழியில் நடைபெறும் இந்த அரசு மதச்சார்பின்மை மற்றும் சமூகநீதிக் கொள்கையில் உறுதியாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையும் கலாச்சாரமும் பண்பாடும் ஜெயலலிதாவின் வழியில் நடக்கும் இந்த ஆட்சி எந்த பங்கமும் வராமல் உறுதியாக பாதுகாக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். சிறுபான்மை மற்றும் அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்விற்கும் அம்மாவின் அரசு என்றும் துணை நிற்கும். உங்கள் அனைவருக்கும் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களையும், அன்பையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்  இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து