முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனில் கும்ப்ளே ராஜினாமா இந்திய கிரிக்கெட்டின் துக்ககரமான தினம் - சுனில் கவாஸ்கர்

புதன்கிழமை, 21 ஜூன் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததையடுத்து சுனில் கவாஸ்கர் இன்றைய தினம் இந்திய கிரிக்கெட்டின் துக்ககரமான தினம் என்று கூறியுள்ளார்.

‘நம்பர் ஒன்’ அணி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் இந்திய அணி உள்ளூரில் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 10-ல் வெற்றியும், 2-ல் டிராவும் கண்டது. ஒன்றில் மட்டுமே தோற்றது. அது மட்டுமின்றி டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறியது. நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது

கருத்து வேறுபாடு

இதனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த வேளையில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே அவருக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. களம் காணும் லெவன் அணியை தேர்வு செய்வது தொடர்பாக இருவருக்கும் ஒத்துவரவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி பயிற்சியின் போது கூட கோலியும், கும்பிளேவும் அதிகமாக பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்திய மற்றும் உள்ளூர் வீரர்களுக்கு ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று கும்பிளே தனிப்பட்ட முறையில் கிரிக்கெட் நிர்வாக கமிட்டியை வலியுறுத்தினார். அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்தை அதிருப்திக்குள்ளாக்கியது.

இழுபறி நிலை

என்றாலும் கும்பிளேவின் தலைமையில் அணி நிறைய வெற்றிகளை குவித்து இருப்பதால், அவரை பயற்சியாளர் பதவியில் நீட்டிக்க சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி முயற்சித்தது. ஆனால் விராட் கோலி, கும்பிளேவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் இருந்து ஒரு அடி கூட இறங்கி வரவில்லை. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், பயிற்சியாளர் நியமனம் வி‌ஷயத்தில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்தது.

ஒப்பந்த காலம் முடிவு

கும்பிளேவுக்கு நேற்று முன்தினத்துடன் ஓராண்டு ஒப்பந்த காலம் முடிவடைந்தது. இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கருத்தில் கொண்டு மேலும் 15 நாட்கள் அந்த பொறுப்பில் தொடரும்படி கிரிக்கெட் வாரியம் அவரை ஏற்கனவே கேட்டு இருந்தது. ஆனால் அதில் விருப்பம் இல்லை என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார். இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்காக நேற்று முன்தினம் லண்டனில் இருந்து பார்படோஸ் புறப்பட்டு சென்றது. அணியினருடன் அவர் செல்லவில்லை. ஐ.சி.சி. கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக லண்டனிலேயே இருந்து விட்டார்.

பதவியில் இருந்து ராஜினாமா

இந்த நிலையில் 46 வயதான கும்பிளே நேற்று முன்தினம் திடீரென பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். ராஜினாமா கடிதத்தை அவர் இந்திய கிரிக்கெட் வாரிய செயல் அதிகாரி ராகுல் ஜோரிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டது. பயிற்சியாளர் பொறுப்புக்கு ஷேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், டோட்டா கணேஷ், லால்சந்த் ராஜ்புத் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களிடம் தெண்டுல்கர் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணல் நடத்தி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும்.

சாதனை அளப்பரியது

இது குறித்து தனியார் டெலிவிஷனுக்கு பேட்டி அளித்த கவாஸ்கர் கூறியதாவது:-

ஓகே பாய்ஸ் இன்னிக்கு பயிற்சி வேண்டாம், லீவு எடுத்துக் கொள்ளுங்கள், ஷாப்பிங் செல்லுங்கள் என்று கூறுபவர்தான் பயிற்சியாளராகத் தேவை என்கிறார்கள். கடந்த ஓராண்டாக தனக்கு இடப்பட்ட பணிகளை திறம்பட, கடினமாகச் செய்து நல்ல முடிவுகளை அளிப்பவர் உங்களுக்குத் தேவையில்லை அப்படித்தானே? எந்த வீரர் கும்ப்ளே மீது புகார் தெரிவித்தது, அப்படி யாராவது தெரிவித்திருந்தால் அந்த வீரர்தான் முதலில் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்.

நேர்மையாகக் கூற வேண்டுமெனில் இந்திய அணிக்காக ஒரு வீரராகவும் கடந்த ஓராண்டில் பயிற்சியாளராகவும் கும்ப்ளேயின் சாதனை அளப்பரியது. எனவே அவர் மீது களங்கம் கற்பிப்பது, அவரைப் பற்றி மோசமாகப் பேசுவது, அவர் ஹெட்மாஸ்டர் போல் நடந்து கொள்கிறார் கடினமாக வேலை வாங்குபவர் என்றெல்லாம் கூறுவதை என்னால் ஏற்க முடியாது.

மோசமான முன்னுதாரணம்

இது ஒரு மோசமான முன்னுதாரணமாகும், நாளைக்கு வரும் புதிய பயிற்சியாளர் வீரர்கள் சொல்பேச்சுக் கேட்டு நடக்க வேண்டுமா? அப்படி இல்லையெனில் அனில் கும்ப்ளேவுக்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும் நேரும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுப்பது போல் அல்லவா இது இருக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். கோலிக்கும் இவருக்கும் இருக்கும் கருத்து வேறுபாடுகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை. எப்படிப்பார்த்தாலும் இந்திய கிரிக்கெட்டுக்கு இது துக்ககரமான நாள். இந்தியா உருவாக்கிய கிரேட்டஸ்ட் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. இவரால் தனது பணியை செய்ய முடியவில்லை எனில் இது வருந்தத்தக்க துக்ககரமான நிலையே. அனில் கும்ப்ளே இடத்தைப் பூர்த்தி செய்யப்போவது யார் என்பது தெரியவில்லை, இவ்வாறு சுனில் கவாஸ்கர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து