முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. சபையில் சர்வதேச யோகா தினவிழா: உலக நாடுகளின் தூதர்கள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 22 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க், சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு, ஐ.நா. சபை சார்பில் தபால் தலை வெளியீடு, தண்ணீர் பூஜை மற்றும் அமைதிக்காக தியானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஊழியர்கள் உலக நாடுகளின் தூதர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் என பல நாட்டவர், மதத்தவர், இனத்தவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதன் ஆசிரமத்தின் சுவாமி சித்தானந்த் சரஸ்வதிஜி மற்றும் சாத்வி பகவதி சரஸ்வதிஜி ஆகியோர் தலைமையில் தண்ணீர் பூஜை நடைபெற்றது. இந்தியாவின் மென்மையான சக்தியை பறைசாற்றும் வகையில் இந்த பூஜை அமைந்தது. இந்த பூஜையின் போது, பூமி கோளத்தின் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளை உயர்த்தி, அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

ஐ.நா.பொது சபையின் தலைவர் பீட்டர் தாம்சன் கூறியபோது, “மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு யோகா பயிற்சி மிகவும் அவசியமாகிறது” என்றார்.

சித்தானந்த் சரஸ்வதிஜி கூறியபோது, “சமீபகாலமாக வன்முறை, போர் சூழலை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில், இனி போர் வேண்டாம், வன்முறை வேண்டாம் என்ற தகவலை யோகா பயிற்சியின் மூலம் உலகுக்கு கொண்டு செல்வோம்” என்றார்.

ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன் கூறியபோது, “மனிதர்களின் ஒற்றுமைக்கான சின்னமாக யோகா விளங்குகிறது. இதை உலக நாடுகளுடன் வெளிப்படையான வழியில் இந்தியா பகிர்ந்து கொள்கிறது” என்றார்.

இந்த நிகழ்ச்சியில், சர்வதேச யோகா தின தபால் தலைகளை ஐ.நா. துணைப் பொதுச் செயலாளர் ஸ்டீபன் கட்ஸ் வெளியிட்டார். 1.15 டாலர் மதிப்பிலான இந்த தபால் தலைகளில் பல்வேறு யோகா பயிற்சி முறைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் யோகா ஆர்வலரும் சமூக ஆர்வலருமான சீன் கார்ன் தலைமையில், உலக அமைதி வேண்டி தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதுதவிர யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என ஐ.நா. அறிவித்தது. இதன்படி 3-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து