முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

64 கிராம் செயற்கைக்கோளை ஏவி சாதனை : கரூர் மாணவருக்கு சட்டசபையில் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : 64 கிராம் எடையுள்ள கையடக்க செயற்கைக்கோளை உருவாக்கிய சாதனை படைத்த தமிழக மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜூக்கு தமிழக சட்டசபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது: கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் உள்ள கிரெசன்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜ் என்ற மாணவர் கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இந்த செயற்கைக்கோளுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்காலம் நினைவாக கலாம் சாட் என்று பெயரிடப்பட்டு, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிக்கரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் 64 கிராம் எடை கொண்டதாகும். ரூ 1 லட்சத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளை ஏவி சாதனையை படைத்து இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமையை தேடித்தந்துள்ள மாணவர் முகமது ஷாருக் ரிபாத் ராஜ்க்கு எனது சார்பிலும், இந்த மாமன்றத்தின் சார்பிலும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழக அரசின் சார்பிலும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அதோடு 57 நாடுகளைச் சார்ந்த 8 ஆயிரம் மாணவர்களை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தேர்வுக்காக அழைத்திருக்கிறது. அந்த 8 ஆயிரம் மாணவர்களில் ஒருவராக இந்த மாணவனும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல சாதனையாளர்களை போற்றி பாராட்டுகின்ற அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு. சாதனையாளர்களுக்குத் தேவையான நிதி உதவிகளைச் செய்து, அவர்களுக்கு ஊக்கமும் அளிக்கின்ற அரசாக விளங்குகிறது. எனவே இந்த மாணவனுக்கு ஊக்கமளிக்கின்ற வகையில் நிதி உதவி செய்வது குறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் உதவித் தொகை அளிக்கப்படும் என தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், சாதனை படைத்த அந்த மாணவரை, எந்தளவுக்கு அமைச்சர் பாராட்டுகிறாரோ அதே அளவுக்கு நானும் பாராட்டுகிறேன் என்றார்,

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற முறையில் 64 கிராம் செயற்கைக்கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்த மாணவர் முகமது சாருக்கை நானும் பாராட்டுகிறேன், இந்த மாணவர், 5 பேர் குழுவாக வந்தார், அவரை வாழ்த்தி ஏற்கனவே கரூர் மாவட்ட அதிமுக சார்பில் ரூ 1 லட்சம் வழங்கி பாராட்டுத்தெரிவித்திருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன், இவ்வாறு அவர் பேசினார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து