முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூமிக்கு அடியில் மின்கம்பிகளை பொருத்தும் பணி விரைவுப்படுத்துவது குறித்து தீவிர நடவடிக்கை : அமைச்சர் பி.தங்கமணி

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னையில் பூமிக்கு அடியில் மின்கம்பிகளை பொருத்தும் பணியை விரைவுப்படுத்துவது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தின் போது, திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தை கொண்டு வந்து பேசியபோது, சென்னையில் பல்வேறு இடங்களில் உயர் மின் அழுத்த கம்பிகள் பூமிக்குள் புதைக்கும் பணியை முடிப்பதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை முடித்து இருந்தால் கொளத்தூரில் மனித உயிர் இழப்புகளும், கால்நடை உயிரிழப்பும் தடுக்கப்பட்டு இருக்கும்.

சென்னையில் ரூ 2,567 கோடி மதிப்பில் 7 லட்சம் மின்சார இணைப்புகளை பூமிக்கு அடியில் பதிக்கும் பணிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கொள்கை விளக்க குறிப்பில் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறினார். மேலும் அதை மத்திய அரசிடமிருந்து பெறுவதாக குறிப்பிட்டார். இப்போது கடனாக பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறும்போது., சட்டமன்ற உறுப்பினர் சென்னையில் மலைப்பாம்பைபோல சென்னை முழுவதும் வெளியே இருக்கிறது என கூறிவிட்டு, அவர் சென்னை முழுவதும் உள்ள பகுதியை பற்றி பேசாமல் குறிப்பிட்டப் பகுதியை மட்டும் கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட கொளத்தூர் தொகுதியில் உள்ள 45 கிலோ மீட்டர் தூரத்தில் 8 கிலோ மீட்டர் தூரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வந்தவுடன் பணிகளை துவக்கி விட்டோம். சென்னை முழுவதும் 81 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சார ஒயர்கள் புதைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாக கூறியவரில் சந்திரா மட்டும்தான் மின்சார வாரியத்தின் தவறால் உயிர் இழந்தார். ஆனால் கலைச்செல்வி வீட்டின் மேல் சென்ற உயர் அழுத்த மின்சார ஒயர் செல்கிறது. அதன் மீது விழுந்த துணியை எடுப்பதற்காக சென்றப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் மாநகராட்சி தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் இருந்து மின்சாரம் கசிந்து உயிரிழந்தார். இருந்தாலும் மின்சார வாரியத்தின் தவறால் ஏற்பட்ட தவறை ஒப்புக்கொள்கிறோம்.

இனி மேல் இது போல் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி சென்னையில் மெட்ரோ ரயில் பணி, சாலை அமைக்கும் பணி, தேசிய நெடுஞ்சாலைப் பணி, டெலிப்போன் லைன் போடும் பணி போன்றவை நடைபெற்று வருகிறது.  மேலும் சென்னையில் புதைவட மின்சார ஒயர்களில் பழுது ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய முடியாது. அதுபோன்ற நேரத்தில் மின்சார ஒயர்கள் பூமிக்கு மேல் பகுதியில் அளிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது.

எல்லாத்துறைகளும் பணிகள் நடைபெறும் போது மின்சார வாரியத்திற்கு கடிதம் எழுதி தெரிவிக்க வேண்டும். அது போன்ற பணிகள் நடைபெறும்போது எங்களிடம் கூற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம்.

ஆனாலும் அவசரம் கருதி பணிகளை மேற்கொள்கிறார்கள், அது குறி்த்து தகவல் கூறாமல் பணிகள் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகரைப் பொறுத்தவரை எங்கு பணிகள் நடக்கிறது என்பது குறித்து அனைத்து துறைகளை சேர்ந்தவர்களையும் அழைத்து சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின்னர் தலைமைச் செயலாளர் தலைமையில் கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கப்படும். மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து