முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

196 புதிய நீதிமன்றங்களை உருவாக்க முதல்வர் தலைமையில் அரசு ஆணை: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடந்த 6 மாதங்களில் மட்டும் 196 புதிய நீதிமன்றங்களை ரூ.98 கோடி செலவில் உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு ஆணை பிறப்பித்து சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சட்டசபையில் நீதி நிர்வாகம், சிறைச்சாலைகள், சட்டத்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்திற்கு அத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நீதி நிருவாகம் சம்பந்தமாக பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனநாயகத்தின் மூன்றாவது தூணாக விளங்கும் நீதித்துறை சிறப்பாக செயல்பட,தேவையான இடங்களில் நீதிமன்றங்கள் உருவாக்குவதும், நீதிமன்றங்களுக்குத் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதலும் மிகவும் முக்கியமான அம்சம் ஆகும். இவ்வாறு நீதித்துறையின் செயல்பாட்டினை மேம்படுத்துவதன் மூலம் தாமதமின்றி அனைவருக்கும் குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு நீதி விரைவாகவும், குறைந்த செலவிலும் கிடைத்திடும் என்பதை நன்கு உணர்ந்து ஜெயலலிதாவின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி தொடர்ந்து நடைபெற்று வரும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான இந்த அரசு அதற்கு மெருகு சேர்க்கும் வகையில் நீதித்துறைக்கு பல்வேறு திட்டங்களுக்கு மிகக்குறுகிய காலத்தில் அனுமதி அளித்து சாதனை புரிந்துள்ளது. கடந்த 6 மாத காலங்களில் மட்டும் நீதித்துறையின் மேம்பாட்டிற்காக ரூ.659.01 கோடி நிதியை இந்த அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்பொழுது மொத்தம் 1048 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில்,சென்னை மாநகரில் 117 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 931 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் 34 புதிய நீதிமன்றங்கள் தமிழகத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது, கிட்டத்திட்ட ஒவ்வொரு மாதமும் 3 புதிய நீதிமன்றங்கள் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் தற்போதுள்ள நீதிமன்றங்களில் 206 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களும், 186 மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களும், 127 சார்பு நீதிமன்றங்களும், 85 மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட நீதிமன்றங்களும் மற்றும் பல சிறப்பு நீதிமன்றங்களும் அடங்கும். கடந்த 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா தலைமையிலான 5 ஆண்டுகால பொற்கால ஆட்சியில் நீதித்துறை மேம்பாட்டிற்காக, புதிய நீதிமன்றங்கள் உருவாக்குதல், புதிய நீதிமன்ற கட்டிடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ரூ.772.2 கோடிநிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 223 புதிய நீதிமன்றங்களை ரூ.52.32 கோடி நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்தில் உருவாக்க ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வாறு உருவாக்க ஆணையிடப்பட்டுள்ள 223 நீதிமன்றங்களில் 150 நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றன.மீதமுள்ள நீதிமன்றங்களும் உயர்நீதிமன்ற ஒத்துழைப்புடன் விரைவில் திறக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்க்கு கொண்டுவரப்படும். இதையே தமிழகத்தின் மிகப்பெரிய சாதனையாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் கருதும் நிலையில் தொடர்ந்து 2 வது முறையாக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்று தற்பொழுது நடைபெற்றுவரும் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அரசு கடந்த 6 மாத காலங்களில் மட்டும் 196 புதிய நீதிமன்றங்களை ரூ.97.91 கோடி செலவில் உருவாக்குவதற்கு ஆணை பிறப்பித்து சாதனையை புரிந்துள்ளது.

3 புதிய சார்பு நீதிமன்றங்கள்

கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உளுந்தூர்பேட்டை, ஆலந்தூர் மற்றும் காங்கேயம் ஆகிய இடங்களில் 3 புதிய சார்பு நீதிமன்றங்களை ரூ.2.94 கோடியில் அமைப்பதற்கு ஆணையிடப்பட்டு,கடந்த வாரம் உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியால் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் ஒருமித்த கருத்துடன் முனைப்பாக செயல்பட்டு நீதி நிருவாகத்தை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்
பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு கடந்த 6 மாத காலங்களில் உருவாக்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள 196 புதிய நீதிமன்றங்களில் சார்பு நீதிமன்றங்கள் – 18, கூடுதல் சார்பு நீதிமன்றங்கள் – 11, கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள் – 4, மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் – 5, மாவட்ட மற்றும் கூடுதல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் – 20, குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் -– 9, குடும்ப நல நீதிமன்றங்கள் – 15 ஆகியவைகள் அடங்கும். இதுதவிர 115 சிறப்பு நீதிமன்றங்களும் இவற்றில் அடங்கும்.

வங்கி – நிதி நிறுவன மோசடி விசாரிக்க….

சென்னையில் வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடியை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம், விழுப்புரத்தில் மயக்க மற்றும் போதைமருந்து தொடர்பான குற்றங்களை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றம், திண்டிவனதில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம், சைதாப்பேட்டையில் 1 விரைவு நீதிமன்றம், எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்க சிறப்பு 16 மாவட்டங்களில் நீதிமன்றங்கள், 22 மாவட்டங்களில் கூடுதல் மகிளா நீதிமன்றங்கள், இரயில்வே சட்டங்களின் வழக்குளை விசாரிக்க 1 நடமாடும் நீதிமன்றம், போலி முத்திரைத்தாள் வழக்குகளை விசாரிக்க சென்னையில் 1 சிறப்பு நீதிமன்றம், ஆலந்தூரில் 1 கூடுதல் மகளிர் நீதின்றம் நீதிமன்றம், சுங்கவரி சட்ட வழக்குகளை விசாரிக்க ஆலந்தூரில் 1 சிறப்பு நீதிமன்றம், நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க செங்கல்பட்டில் 1 சிறப்பு நீதிமன்றம், மாற்றுரிமை ஆவணச்சட்டம் வழக்குகளை விசாரிக்க திருநெல்வேலியில் 1 சிறப்பு நீதிமன்றம், எந்தவித நீதிமன்றங்களும் இல்லாத 51 வட்டங்களில் சிறு வழக்குகளை விசாரிக்க சிறப்பு குற்றவியல் நீதிமன்றங்கள், சுரங்க மற்றும் கனிம வளம் சட்ட வழக்குகளை விசாரிக்க மதுரையில் ஒரு சிறப்பு நீதிமன்றம், சீட்டு நிதி நிறுவனங்கள் தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்க சென்னையில் ஒரு சிறப்பு நீதிமன்றம், சென்னையில் மாவட்ட நீதிபதி தலைமையிலான 14 கூடுதல் நீதிமன்றங்கள். தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பல சிறப்பு நீதிமன்றங்களில் பெரும்பாலான நீதிமன்றங்கள் ஜெயலலிதா ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

25 குடும்பநல நீதிமன்றம்

* மாவட்ட நீதிபதி பதவிதரத்தில் 25 குடும்பநல நீதிமன்றங்கள் ஒப்பளிக்கப்பட்டு தற்பொழுது 20 நீதிமன்றங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 18 நீதிமன்றங்கள் கடந்த 5 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டது.
* பணிபுரியும் வழக்காடுபவர்களின் வசதிக்காக செயல்பட்டுவரும் 4 விடுமுறை கால குடும்பநல நீதிமன்றங்கள் ஜெயலலிதாவினால் உருவாக்கப்பட்டவை.
* இதுபோன்று தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க அமைந்துள்ள 8 நீதிமன்றங்களில் 4 நீதிமன்றங்கள் கடந்த 5 ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
* மகளிரை களங்கப்படுத்துதல், கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை பிரத்யேகமாக விசாரிக்க மகளிர் நீதிமன்றங்கள் மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 32 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நீதிமன்றங்களில் 22 நீதிமன்றங்கள் ஜெயலலிதாவினால் உருவாக்கப்பட்டது.
* மேலும், சிறார்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களையும் மகளிர் நீதிமன்றங்களே விசாரிக்க லாம் என்று ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளதால், இத்தகைய குற்றங்கள் உடனடியாக தமிழகத்தில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படுகிறது.

ஆதிதிராவிடருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க…

* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 2 சிறப்பு நீதிமன்றங்களை 2013–-14ம் ஆண்டு உருவாக்கினார்கள். இதுமட்டுமன்றி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க 16 புதிய நீதிமன்றங்களை 4 கட்டங்களில் உருவாக்குவதற்கு இந்த அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதில் முதல் கட்டமாக திண்டுக்கல், ராமநாதபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இந்த ஆண்டு தொடங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* தேங்கிக் கிடக்கும் சிறு வழக்குகளை துரிதமாக விசாரணை செய்ய 31 மாலை நேர நீதிமன்றங்கள் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதா ஆணைப்படி நிறுவப்பட்டுள்ளன.
* இதுபோன்று மோட்டார் வாகன விபத்து இழப்பீடு அசல் மனு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அசல் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் மொத்தம் 32 தமிழகத்தில் உள்ளது. இவை அனைத்துமே கடந்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது .
* இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் தான் 32 மாவட்டங்களிலும் நிரந்தர மக்கள் நீதிமன்றங்கள் ரூ.7.7 கோடி செலவில் ஜெயலலிதாவினால் ஏற்படுத்தப்பட்டது.இதனால் தமிழகம் இந்தியாவில் நீதித்துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

* 49 விரைவு நீதிமன்றங்களையும், மாவட்ட நீதிமன்ற தகுதிக்கு தரம் உயர்த்தி, அவற்றை நிரந்தர நீதிமன்றங்களாக அறிவித்து அங்கு பணிபுரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கி ஜெயலலிதா ஆணை யிட்டார். இந்த நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமின்றி இந்த நடவடிக்கையை அனைத்து மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளது

இவ்வாறு தற்பொழுதுள்ள பல்வேறு விதமான சட்ட பிரச்சனைகளை மக்கள் நீதிமன்றங்களை அணுகி தீர்த்துக் கொள்ள ஏதுவாக தமிழகத்தில் பல சிறப்பு நீதிமன்றங்களை ஜெயலலிதா உருவாக்கிய அதே பாதையில் இந்த அரசும் பல சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கி செயல்பட்டு வருகிறது.

ஐகோர்ட் மதுரை கிளையால் 13 தென் மாவட்டங்கள் பலன்

இதுமட்டுமன்றி தென்மாவட்டங்களில் வாழும் பாமர ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், எடுத்த நடவடிக்கையின் மூலம் 24.7.2004 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தொடங்கி வைக்கப்பட்டது. இதனால், 13 தென் மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் ஏழை எளிய பாமர மக்களின் சட்டப் பிரச்சனைகளுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன் சென்னையிலுள்ள தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சட்ட உதவி மையக் கட்டடத்தில் சட்ட உதவி மையம் ஒன்று தொலைபேசி வழி சட்ட உதவி அளிக்கும் பொருட்டு இயங்கி வருகின்றது. இம்மையத்திற்கு சுழற்சி முறையில் காலை மற்றும் மாலை இருவேளையும், அனைத்து வேலை நாட்களிலும், வழக்கறிஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டு பொதுமக்களின் சட்டம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொலைபேசி வாயிலாக தக்க ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சட்ட உதவி கோரும் பொதுமக்கள் 044-–25342441 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

மத்திய அரசு 14 வது நிதிக்குழுவின் கீழ் விரைவு நீதிமன்றங்கள், கூடுதல் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், மனித வளங்களை மேம்படுத்துதல், தொழில்நுட்ப உதவி, ஆவணங்களை எண்ணியமயமாக்கல், மாற்று முறை தீர்வு மையம் மற்றும் மக்கள் நீதிமன்றங்களை அமைப்பது போன்ற பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. மேற்காணும் திட்டங்களுக்காக செலவினத்தை மத்திய அரசு, மாநில அரசுக்கென அதிகரித்துள்ள 10% வரி பகிர்விலிருந்து மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த செலவினங்களுக்காக தனியாக ஒதுக்கீடு எதுவும் 14வது நிதிக்குழுவில் செய்யப்படவில்லை. ஆனால் பதினான்காவது நிதிக்குழு பரிந்துரைப்படி கீழ் பல திட்டங்களுக்கு மாநில அரசின் நிதியிலிருந்து நிதி ஒப்பளிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

* தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் ஒவ்வொரு மாதமும் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.2015–-16ம் ஆண்டிற்கான மக்கள் நீதிமன்றங்கள், மாபெரும் மக்கள் நீதிமன்றங்கள் மற்றும் சட்ட அறிவு விளக்க முகாம்கள் நடத்துவதற்காக ஜெயலலிதா ரூ.1.07 கோடி ஒப்பளித்துள்ளார்.இக்காலகட்டத்தில் 11,40,088 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ.2296 கோடி அளவிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.மேலும் 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் மக்கள் நீதிமன்றங்கள் நடத்துவதற்காக ரூ.5.5 கோடி நிதி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டு 2016–-17 ஆண்டிற்கு ரூ.1.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆ) உயர்நீதிமன்றத்திலுள்ள வழக்கு ஆவணங்களை எண்ணியமயம் ஆக்குவதற்காக ரூ.9.4 கோடியும் மற்ற நீதிமன்றங்களில் உள்ள வழக்காவணங்களை எண்ணியமயம் ஆக்குவதற்காக ரூ.27.67 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இ) நீதிபதிகளுக்கான பயிற்சிக்காக 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு ரூ.10.24 கோடி நிதி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டு இந்த ஆண்டிற்கு ரூ.2.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈ) பொதுமக்களுக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் என்ற நோக்கதில் ஜெயலலிதா ஒவ்வொரு மாவட்டத்திலும், மாற்று முறைத் தீர்வு மையங்களை அமைத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மாற்றுத் தீர்வு மையக் கட்டடம் கட்டுவதற்கு ரூ.4.20 கோடியும், மீதமுள்ள 29 நீதித்துறை மாவட்டங்களில் மாற்றுத் தீர்வு மையக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.29 கோடியும் ஒப்பளிக்கப்பட்டுள்ளன. இம்மையத்தின் நடவடிக்கைகளுக்காக 2016 முதல் 2020 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு ரூ.19.7 கோடிநிதி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டு இந்த ஆண்டிற்கு ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் ஆலோசகர்கள் மற்றும் மத்தியஸ்தர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு ஐந்து ஆண்டு காலத்திற்கு ரூ.12.2 கோடி ஒதுக்க அனுமதி அளிக்கப்பட்டு இந்த ஆண்டிற்கு ரூ.3.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இவர்களின் பயிற்சிக்காக மேலும் ரூ.1.2 கோடி நிதி இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளது.

நடத்துனர்கள் நியமனம்

தற்போதுள்ள 725 உரிமையியல் நீதிபதிகளில் 322 நீதிபதிகள் கடந்த 5 ஆண்டுகளில் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளது நீதித்துறையில் பெரிய சாதனையாக கருதப்படுகிறது .இதுபோன்று கடந்த 5 ஆண்டுகளில் 215 அரசு உதவி வழக்கு நடத்துனர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கினார் ஜெயலலிதா.
தமிழகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களும் சொந்த கட்டிடங்க ளில் இயங்க வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் நோக்கம் ஆகும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து இன்று தமிழ கத்தில் 88 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் அரசு அல்லது சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்ற நிலையை உருவாக்கியுள்ளார். புதிய நீதிமன்ற கட்டடங்கள் அமைப்பது, நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், கூடுதல் கட்டிடங்கள், வழங்கறிஞர்களுக்கான அறைகள்அமைப்பது போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளில் 636.36 கோடி ரூபாய் மதிப்பிலான 200 க்கும் மேற்பட்ட திட்டங்களை ஜெயலலிதா செயல்படுத்தியுள்ளார். இவற்றில் 2 9புதிய மற்றும் கூடுதல் நீதிமன்ற கட்டடங்களும் அடங்கும். மேற்குறிப்பிட்ட 636.36 கோடி தொகையில் 155.23 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசின் பங்கு ஆகும். மீதமுள்ள தொகை அனைத்தும் ஜெயலலிதாவினால் அளிக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டில் மட்டும் 12 ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அதாவது தமிழகத்தில் மாதத்திற்கு ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது.

மேலும், கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் சென்னை எழும்பூர் நீதிமன்ற கட்டடத்தில் கூடுதலாக மூன்று தளங்கள் ரூ.8.69 கோடி செலவிலும், சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் ரூ.6.35 கோடி செலவிலும், திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 7 கூடுதல் நீதிமன்ற கட்டடங்கள் மற்றும் 8 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் 23.5 கோடி செலவிலும், திருப்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள் ரூ.33.75 கோடி செலவிலும் கட்டப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்குப்பிறகு கடந்த 6 மாதங்களில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு சாத்தான்குளம், தென்காசி, தஞ்சாவூர், சிவகாசி, வாடிப்பட்டி, செங்கம், ஸ்ரீபெரும்புதூர், சிதம்பரம், ராஜபாளையம், கிருஷ்ணகிரி, உதகமண்டலம். ஆகிய இடங்களில் ரூ.173.35 கோடி செலவில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் அமைப்பதற்கும் ஆணையிட்டுள்ளது.

பிற வசதிகள் ஏற்படுத்துதல்

நீதிமன்றங்களுக்கு பல்வேறு பிற வசதிகளையும் ரூ.45.47கோடி செலவில் ஏற்படுத்தி நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்துள்ளது. இவற்றில் குறிப்பாக கடந்த 6 மாத காலங்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டவை விவரம்:–

* தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்துவதற்காக ரூ.12.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உயர்நீதிமன்றத்தை பயன்படுத்தும் வயதான மற்றும் மகளிரின் வசதிக்காக லிப்ட் வசதிகள் அமைப்பதற்கு ரூ.3.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நீதிமன்ற வளாக கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை சரிசெய்வதற்காகவும் பராமரிப்பதற்காகவும் ரூ.18.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீதிமன்ற பாதுகாப்பிற்காக உயர் நீதிமன்ற வளாகம் மற்றும் எழும்பூர், ஜார்ஜ் டவுன் மற்றும் சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் ரூ. 7.7 கோடியில் வாங்க ஆணை பிறப்பித்துள்ளார். இது தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் சிசிடி காமிரா மற்றும் மெட்டல் டிடெக்டர்ஸ் அமைப்பதற்குஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* வழக்காடும் நீதிபதிகளின் நலனுக்காகவும் தேவையான வசதிக ளையும் பல்வேறு நீதிமன்றங்களில் ஏற்படுத்தி வருகிறார்கள். இவற்றில் குறிப்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் 4 கட்டமாக 98 வழக்கிஞர்கள் அறைகள் ரூ.7.42 கோடி செலவில்கட்டுவதற்கு ஆணையிடப்பட்டு முதல் கட்ட கட்டுமானப் பணிக்காக ரூ.2.49 கோடி நிதி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணிகளை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி துவக்கி வைத்தார். இது தவிர உதகமண்டலத்திலும் வழக்கறிஞர்களின் நலனுக்காக 49 வழக்கறிஞர்கள் அறைகள் கட்டுவதற்கு 22.5.2017 அன்று ஆணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்றங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் நீதிமன்ற நடவடிக்கைகளை துரித மாக செய்திட, உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் செயல்பாடு களை கணிணி மயமாக்குவது, நீதிமன்றங்களுக்கு ஜெராக்ஸ், காப்பியர் போன்றவற்றை அளிப்பது, அவசியமான அறைகலன்களை அளிப்பது, நீதிபதிகளுக்கு வாகனங்கள் அளிப்பது போன்ற வசதிகளுக்காக இந்த அரசு கடந்த 6 மாத காலத்தில் மட்டும் ரூ.92.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை புரிந்துள்ளது.

* உயர்நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களை கணிணிமயமாக்குவ தற்கு ரூ.65.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிக ளுக்கும் மடிக்கணினிகள், கணிப்பொறிகள், அச்சுப்பொறிகள் மற்றும் அகன்ற வலைதள இணைப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளது. இதுபோன்று சார்பு நீதிமன்றங்களிலும் அனைத்து நீதித்துறை அலுவலர்களுக்கும் மடிக்கணினிகள், லேசர் அச்சுப்பொறிகள் மற்றும் அகன்ற வலைத்தள இணைப்பு வழங்கப்பட உள்ளன.
* தமிழ்நாடு நீதித்துறை பயிற்சிக் கழகத்திற்கென ரூ4.50 கோடி செலவில் ஒரு புதிய கட்டிடம் உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சிக் கழகத்தினை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு மாநில நீதித்துறை பயிற்சிக் கழகத்தின் மண்டல மையங்கள் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ரூ.21.80 கோடி செலவில் கட்டப்பட்டு 21.2.2016 முதல் செயல்பட்டு வருகின்றது. மேலும், இம்மையங்களுக்கு பணியாளர்கள், கூடுதல் வசதிகள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.6.30 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
* சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒன்பது அடுக்கு புதிய கட்டடத்தில் ஒரு தளத்தில் பதிவேடுகளை பாதுகாப்பதற்கான காம்பாக்டர் மற்றும் ஆப்டிமைசர் வாங்குவதற்காக ரூ.2.34 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.
* உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.16.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* உயர்நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்றங்களுக்கு சட்ட புத்தகங்கள் வாங்குவதற்கு ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பல்வேறு நீதிமன்றங்களுக்கு அறைகலன்கள் வாங்குதவற்கு ரூ.2.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றங்களுக்கு கூடுதல் பணியாளர்கள்

நீதித்துறையின் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறவும், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்த்து விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, இந்த அரசு, தமிழ்க நீதித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 6 மாத காலத்தில் ரூ.117.1 கோடி செலவில் பல நீதிமன்றங்களுக்கு 3400க்கும் மேற்பட்ட புதிய மற்றும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கஆணை பிறப்பித்துள்ளது.

* சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 487 பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மேலும், 102 தொழில்நுட்ப பணியாளர்கள் சென்னை உயர்நீதி மன்றத்திற்கும், பல சார்பு நீதிமன்றங்க ளுக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
* 130 மொழிபெயர்ப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கும் நியமிக்கப்பட உள்ளனர்.
* பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 22 பணியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள நூலகத்திற்கு நியமிக்கப்படவுள்ளனர்.
* 1344 பணியாளர்கள் சென்னை மாநகர நீதிமன்றத்திற்கும் மற்றும் 32 மாவட்ட நீதிமன்றத்திற்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
* 139 இளநிலை உதவியாளர்களும், 296 ஜெராக்ஸ் ஆப்பரேட்டர்களும், 275 இரவு காவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
* தமிழ்நாடு மாநில சட்ட கழகத்திற்கு பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 31 புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வழக்குரைஞர்கள் நலன் கருதி இறந்த வழக்குரைஞர்களின் சட்டமுறை யிலான வாரிசுதாரர்களுக்கு, நியமனதாரர்களுக்கு நல உதவி வழங்கிடும் திட்டம் முதன் முதலில் எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1987-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நல நிதியிலிருந்து வழங்கப்படும் நிதி உதவி தொகையை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5.25 லட்சமாக 2012-ம் வருடம் முதல் உயர்த்தி வழங்கியவர் ஜெயலலிதா இதை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து