முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நட்பு நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்யக்கோரி பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் மசோதா

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பாகிஸ்தான் நட்பு நாடு என்ற அந்தஸ்தை ரத்துச்செய்யக்கோரி அமெரிக்க செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெருமளவு நிதி உதவி

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்வதாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகின்றன. இருந்த போதிலும், பாகிஸ்தானுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அமெரிக்கா ஆண்டு தோறும் பெருமளவு நிதி உதவி செய்து வருகிறது. பாகிஸ்தான், பயங்கரவாதத்தை திறம்பட எதிர்ப்பதற்காக இந்த நிதி அளிக்கப்படுவதாக அமெரிக்கா கூறி வருகிறது. அண்மையில் அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், நிதி வழங்கும் விவகாரத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்தார்.

நட்பு நாடு அந்தஸ்து

பாகிஸ்தானுக்கு நேட்டோ அல்லாத மிகப்பெரிய நட்பு நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா வழங்கியிருக்கிறது. கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போது  அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ், பாகிஸ்தானுக்கு இந்த அந்தஸ்தை வழங்கினார். பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருக்கும் இந்த அந்தஸ்தின் கீழ்,  பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுத விற்பனை நடைமுறைகளை துரிதப்படுத்துவது, அமெரிக்க கடன் உத்தரவாத திட்டம் ஆகிய சலுகைகளை பாகிஸ்தான் பெற முடியும். மேலும், அமெரிக்காவின் ராணுவ வன்பொருளை கையிருப்பாகவும் வைத்துக்கொள்ளவும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களிலும் பாகிஸ்தான் பங்கேற்க முடியும்.

மசோதா தாக்கல்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அந்தஸ்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்க செனட் சபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  குடியரசுக்கட்சியின் எம்.பி டெட் போ மற்றும் ஜனநாயக கட்சியின் எம்.பி ரிக் நோலன் ஆகிய இருவரும் கூட்டாக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளனர். 

பெரும் பின்னடைவு

அமெரிக்காவின் வெளியுறவு விவகாரங்களில் உறுப்பினராகவும் இருக்கும் டெட் போ கூறுகையில், தனது கையில் இருக்கும் அமெரிக்கர்களின் இரத்தங்களுக்கு  பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும். பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இரட்டை வேடத்துடன் அமெரிக்காவுடனான நட்பை கொண்டுள்ளது. ஓசாமா பின்லேடனுக்கு புகலிடம் அளிப்பதில் இருந்து தலீபான்கள் ஆதரவு என பாகிஸ்தான் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.  அமெரிக்க செனட் சபையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து