முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

31 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 38 ராக்கெட்

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

சென்னை, இந்தியாவின் ‘கார்ட்டோசாட்– 2இ’ உள்ளிட்ட 31 செயற்கைகோள்களுடன் நேற்று  வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 38 ராக்கெட் . பின் செயற்கைகோள்கள் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு ஜனாதிபதி பிரணாப், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

7–வது கார்ட்டோசாட்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல்களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது. அந்தவகையில் பூமி கண்காணிப்பு மற்றும் தொலையுணர்வுக்காக ‘கார்ட்டோசாட்’ வகை செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கைகோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

வெற்றிகரமாக பாய்ந்தது

பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கைகோளை நேற்று காலை 9.29 மணிக்கு சென்னைக்கு அருகே உள்ள ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

14 நாடுகளை சேர்ந்த ...

இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருவதால் இந்திய செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த அதிகம் முன் வருகின்றனர். அந்தவகையில் கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரிட்டன், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவாக்கியா மற்றும் அமெரிக்கா ஆகிய 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன், இந்தியாவைச் சேர்ந்த ‘கார்ட்டோசாட்– 2இ’ மற்றும் 1 நானோ செயற்கைகோளும் நேற்று வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.  பின் 31 செயற்கைக்கோள்களும் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. கார்ட்டோசாட் 2-இ பிரதான செயற்கைக் கோளுடன் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கியுள்ள 15 கிலோ எடையுள்ள சிறிய ரக செயற்கைக்கோளும் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 31 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 955 கிலோ. செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட்டின் மொத்த எடை 320 டன். கார்ட்டோசாட் 2-இ செயற்கைக்கோளின் எடை 712 கிலோ ஆகும்.

ரூ.160 கோடியில் ...

கார்ட்டோசாட்– 2இ செயற்கை கோளில் இயற்கை வளங்களை பல்வேறு கோணங்களில் துல்லியமாக படம் எடுக்க உதவும் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நில அமைப்பை துல்லியமாக கண்காணித்து, தரமான புகைப்படத்தை அனுப்பும் திறன் உடையது. அதைக் கொண்டு நகர, ஊரக மேம்பாட்டு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். சாலைப் போக்குவரத்து, குடிநீர் விநியோகம், கடலோரப் பகுதிகள் பயன்பாடு உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும். இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்தை ரூ.160 கோடியில் இஸ்ரோ நிறைவேற்றியுள்ளது. இந்த தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பிரதமர் வாழ்த்து

செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:- “ 15 நாடுகளின் 31 செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து