முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 7 பேரின் சஸ்பெண்டு நடவடிக்கை ரத்து: வருத்தம் தெரிவித்ததால் மன்னிப்பு அளித்து சபாநாயகர் தனபால் நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நடத்திய ரகளை தொடர்பாக 7 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு 6 மாத தண்டனை வழங்க உரிமைக்குழு பரிந்துரை செய்தது. தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்ததன்பேரில் சபாநாயகர் தனபால், பெருந்தன்மையுடன் இந்த தண்டனையை வாபஸ் பெறலாம் என வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து சட்டசபையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மீதான தண்டனையை வாபஸ் பெற தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

உரிமைக்குழு அறிக்கை

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், உரிமைக் குழுவின் தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் சட்டசபையில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்கார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.சுரேஷ் ராஜன், கார்த்திகேயன், பி.முருகன், கு.க.செல்வம் ஆகிய 7 பேர் மீதான உரிமை மீறல் பிரச்னை குறித்து அவை உரிமைக்குழு அறிக்கையை அளித்தார். அந்த அறிக்கையில் செய்திருந்த பரிந்துரைகளை சபை ஏற்றுக் கொள்வதற்காக தீர்மானத்தை அவை முன்னவரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கொண்டு வந்தார்.

பாடமாக அமையும்

இதனையடுத்து சபாநாயகர் தனபால் பேசினார். அவர் பேசியதாவது:-
18-2-2017 அன்று நடைபெற்ற சம்பவங்களின்போது தி.மு.க. உறுப்பினர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் பேரவையினுடைய ஒட்டுமொத்த உரிமையை பாதிப்பதாகத் தெரிவித்து பி.வெற்றிவேல் ஓர் உரிமை மீறல் பிரச்னை குறித்த அறிவிப்பினைக் கொடுத்தார். அதுகுறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக உரிமைக் குழுவிற்கு அனுப்பினேன். வருங்காலத்தில் சுதந்திரமான முறையில் நாட்டு மக்களின் நன்மைக்காக, பேரவை விதிகளுக்குட்பட்டு, கண்ணியமான முறையில், எவ்வித அச்சுறுத்தலும் இன்றி உறுப்பினர்கள் பேரவையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த ஏதுவாகவும், சட்டமன்றத்தில் பேரவைத் தலைவரின் ஜனநாயகக் கடமைகளை வன்முறை மூலமும், அச்சுறுத்தல் மூலமும், அடாவடியான நடவடிக்கை மூலமும் தடுத்துவிட முடியும் என்ற தவறான எண்ணத்தை விதைக்கக்கூடிய உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், பிற உறுப்பினர்களுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டுமென்ற வகையிலும்,

உரிமைக் குழு பரிந்துரை

குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டும் அவை நடவடிக்கைகளுக்குப் பெரிதும் குந்தகம் விளைவித்த தி.மு.க உறுப்பினர்கள் எஸ்.அம்பேத்குமார், கே.எஸ்.மஸ்தான், கே.எஸ்.ரவிச்சந்திரன், என்.சுரேஷ்ராஜன், க.கார்த்திகேயன், பி.முருகன், கு.க.செல்வம் ஆகியோர் ஆறு மாத காலத்திற்கு அவை நடவடிக்கைகளிலிருந்து நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இக்காலத்தில் இவ்வுறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தையும், எந்தவிதமான பிற ஆதாயங்களையும், சலுகைகளையும், தகுதிகளையும் பெற இயலாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவை உரிமைக் குழு பரிந்துரை செய்துள்ளது. அந்தப் பரிந்துரை நிறைவேற்றப்பெற வேண்டுமென்று இங்கே பேரவையின் சார்பாக பேரவை முன்னவர் தீர்மானத்தை மொழிந்துள்ளார்.

பேரவையே பாதுகாப்பு

தீர்மானத்தை வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு முன்னர் இந்தப் பிரச்னையில் முழுவதுமாக நான் பாதிக்கப்பட்டவன் என்ற முறையிலே ஒருசில கருத்துக்களை என்று சொல்ல மாட்டேன், ஒரு சில வேண்டுகோளை பேரவைமுன் வைக்க விரும்புகிறேன். பேரவைத் தலைவர் என்ற முறையிலே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்கள். இன்றைக்கு நான் உங்கள் அனைவரிடமும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். அவை உறுப்பினர்களுக்கு பேரவைத் தலைவரே பாதுகாப்பு, பேரவைத் தலைவருக்கு இந்தப் பேரவையே பாதுகாப்பு என்ற முறையில் எனக்கு ஏற்பட்ட நிகழ்வை, தன்னுடையதாக ஏற்றுக்கொண்டு இந்தப் பேரவை நடவடிக்கை எடுக்க முனைந்துள்ளதற்கு என்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

மன்னிப்புக்கடிதம்

மேற்காணும் 7 தி.முக. உறுப்பினர்களும் கடந்த 21.-6.-2017 அன்று என்னை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை அளித்து, மன்னிப்பும் கோரியுள்ளதோடு வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட மாட்டோம் எனவும் உறுதிமொழி அளித்துள்ளனர்.
பேரவையினுடைய உரிமை பாதிக்கப்படக் கூடிய அளவில் 18-2-2017 அன்று பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகள் தி.மு.க. உறுப்பினர்களால் அரங்கேற்றப்பெற்றதைச் சுட்டிக்காட்டி, மேற்காணும் 7 தி.மு.க. உறுப்பினர்கள் அவை மீறிய செயலைச் செய்துள்ளதாகவும், அதற்கான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் எனவும் உரிமைக் குழு தனது அறிக்கையில் எடுத்துக்காட்டி, அதற்கான தண்டனையை பரிந்துரை செய்துள்ளது.

புதியவர்கள் என்பதால் ...

அதனை பேரவையும் ஏற்றுக்கொண்டு, நிறைவேற்ற முன்வந்துள்ள போதிலும், உறுப்பினர் சுரேஷ் ராஜனைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் இப்பேரவைக்கு புதியவர்கள் என்கிற காரணத்தாலும், மேற்காணும் 7 தி.மு.க. உறுப்பினர்களும் நேரில் வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்து, மன்னிப்பும் கோரி எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் உறுதியளித்துள்ளதை ஏற்றுக்கொண்டும், இதுமாதிரி எதிர்காலத்தில் அவர்கள் நடக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்போடும், பேரவை முன்னவர் முன்மொழிந்துள்ள தீர்மானத்தை பேரவையின் அனுமதியோடு திரும்பப்பெற்றுக் கொண்டு, அவை உரிமை மீறல் செயலைச் செய்த 7 தி.மு.க. உறுப்பினர்களை எச்சரித்து, பிரச்சினையை இத்தோடு விட்டுவிடலாம் என நான் கருதுகிறேன். இதனை பேரவை தயவுசெய்து பரிசீலனை செய்ய வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

தீர்மானம் நிறைவேறியது

இதனையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், உங்களது வேண்டுகோள் அல்ல; உங்களது உத்தரவு என எடுத்து கொண்டு நான் முன்மொழிந்த தீர்மானத்தை (7 பேருக்கும் தண்டனை வழங்கும் தீர்மானம்) திரும்ப பெறுகிறேன். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா வழியில் வந்தவர் நீங்கள் (சபாநாயகர்). அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். ஜெயலலிதாவால் பாராட்டப்பட்டவர் நீங்கள். மனித நேயம், இரக்க குணம் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்கள் உத்தரவை ஏற்று நான் முன்மொழிந்த தீர்மானத்தை திரும்ப பெற தீர்மானம் ஒன்றை முன்மொழிகிறேன் என்றார். இதனையடுத்து அந்த தீர்மானம் (தண்டனை வாபஸ்) குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.

மு.க.ஸ்டாலின் நன்றி

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்று நீங்கள் பெருந்தன்மையுடன் அறிவித்துள்ளீ ர்கள். தி.மு.க. சார்பில் பேரவை தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவை முன்னவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். சம்பவம் நடந்த அன்று தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்திருந்தால் மன்னிப்பு தெரிவித்துக்கொள்கிறேன் என்று அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். தங்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அபுபக்கர் ஆகியோரும் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து