முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை: மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு - தமிழக அரசு அறிவிப்பு

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

"தமிழ்நாட்டில் மாநில பாடப்பிரிவு முறையில் பயின்று நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 85 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது." -  அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்

சென்னை : தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையின் போது மாநில பாடத்திட்டத்தில் படித்த  மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளதாகவும்  நேற்று சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உறுப்பினர்கள் கேள்வி

சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன்  எழுந்து, நீட் தேர்வு முடிவு தற்போது வந்திருக்கிறது. ஆனால், அந்தத் தேர்வினுடைய முடிவை பார்த்தால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதை எப்படி மீட்பது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. எனவே, நீட் தேர்வினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற தமிழகத்தை மீட்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதிலளித்து பேசியதாவது:-

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் நீட் தேர்வையொட்டி அடுத்து அரசின் நிலைப்பாடு என்ன என்பதைக் கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு இதுகுறித்து கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவந்தபோது, அரசின்நிலைப்பாட்டினை நான் தெளிவாகச் சுட்டிக்காட்டினேன்.

அரசின் கவனம்

நீட் தேர்வு முடிவு வந்திருக்கிறது. நம்முடைய சட்டமன்றத்தில் ஏற்கெனவே 2 மசோதாக்கள், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, அவை மத்திய அரசின் பரிசீலனையில் இருந்து கொண்டிருக்கிறது. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி நான் ஏற்கெனவே இந்த அவையில் தெரிவித்திருந்தேன். இன்றைய சூழ்நிலையில், இன்றைக்கு பிளஸ்-2 தேர்வுகள் எழுதிவிட்டு காத்துக் கொண்டிருக்கும் அத்துணை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உணர்வுகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அதேபோல தலைமைச் செயலாளர், அட்வகேட் ஜெனரல் மற்றும் சட்ட நிபுணர்கள் அத்துணைபேரும் மிகுந்த கவனத்துடன் நம்முடைய இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு, உச்ச நீதிமன்ற பெஞ்சு தீர்ப்பு, மத்திய அரசின் சட்டம் இவற்றையெல்லாம் அரசு கவனத்தில்கொண்டு செயல்படுகிறது.

பிரதிநிதித்துவம் அளிக்க ...

நான் ஏற்கெனவே சொன்னதுபோல், 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியிருக்கிறார்கள். அதேபோல 4,675 மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வு எழுதியிருக்கிறார்கள். இந்த 4.2 லட்சம் பேர் இந்த மாநில பாடப்பிரிவில் பயோலஜி தேர்வு எழுதியவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய அத்துணை பேரின் உணர்வு. அதற்காகத்தான் இந்த மாமன்றத்தில் இந்த 2 மசோதாக்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அழுத்தம் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரசாணை வெளியீடு

இந்த மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனும் சொன்னார். மாநில பாடப்பிரிவில் பயோலஜி எழுதிய மாணவர்கள் நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக வாங்கியிருக்கிறார்கள் என்ற கருத்தைச் சொன்னார்.  இந்தச் செய்தி பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வந்திருக்கின்றது. அப்படி குறைவாக மதிப்பெண்கள் வாங்கினாலும் கூட, அந்த மாணவர்களின் பிரதிநிதித்துவம் எந்தவிதத்திலும் பாதிக்ககூடாது என்பதை மிகுந்தகவனத்தோடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, ஜூன் 22-ம் தேதி மாலை ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

85 சதவீதம் ஒதுக்கீடு

அந்த அரசாணையில் இந்த அரசின்நிலைப்பாட்டைச் சொல்லியிருக்கிறோம். மத்திய அரசில் 2 மசோதாக்கள்  இன்னும் நிலுவையில் இருக்கின்ற காரணத்தினால், சட்டமன்றத்தில் நம்மால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஒத்துக்கொள்ளப்பட்டால், பிளஸ்-2 தேர்வு எழுதி மாணவர்களுக்கான மருத்துவ சேர்க்கை நடைபெறும். ஒருவேளை இதில் காலதாமதம் ஏற்படுகிறபோது, இங்கு 4.2 லட்சம் மாணவர்கள் மாநில பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். 4,675 மாணவர்கள்  மத்திய பாடப்பிரிவில் தேர்வு எழுதியிருக்கிறார்கள். இதில் விகிதாச்சாரப்படி எடுத்தக்கொண்டால் கூடகிட்டத்தட்ட 95 சதவிகிதம் நம்முடைய மாநில பாடப்பிரிவு மாணவர்களுக்கும், 5 சதவிகிதம்தான் சி.பி.எஸ்.இ மாணவர்களும் இருப்பார்கள். இவற்றையெல்லாம் மனதிலே வைத்துதான், சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இப்போது 15 சதவிகிதம் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும்,  நம்முடைய மாநில மாணவர்களின் உரிமையை நிலைநாட்டக்கூடியவகையில், அரசு மிகுந்த கவனத்தோடு 85 சதவிகிதம் உள்ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என்ற செய்தியை, நீங்கள் அத்துணைபேரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இந்தச் செய்தியை நான் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.

உள்ஒதுக்கீடு அடிப்படையில் ...

ஆகவே, திட்டமிட்டபடி ஜூன் 26-ம் தேதி இதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்படும். ஜூன் 27-ம் தேதியிலிருந்து பிளஸ்-2 முடித்த அனைத்து மாணவர்களும் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவம் பெற்றுக்கொள்ளலாம். அகில இந்திய கலந்தாய்வு முடிந்த பிறகு, அடுத்தம் மாதம் 17- ம் தேதி திட்டமிட்டபடி நம்முடைய தமிழ்நாடு அரசினுடைய மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும். அந்தக் கலந்தாய்வு இந்த உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கும். நிச்சயமாக இந்த உள்ஒதுக்கீட்டை அனைத்து உறுப்பினர்களும், அனைத்து கட்சியினரும் ஏற்பார்கள். நீங்களெல்லாம் தொடர்ந்து இந்தமாநிலத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தீர்கள். அதன் அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து இந்த நல்ல முடிவை எடுத்திருக்கின்றார்.
இவ்வாறு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து