முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிஅமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை, -  எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை உலக தமிழ்சங்க கட்டிட வளாகத்தில்  மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் முன்னிலையில் கல்லூரி மாணவிகளின் கிராமிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் பேச்சு போட்டிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார்.
           மதுரை மாவட்டத்தில் வருகின்ற 30.06.2017 அன்று பாண்டிகோயில் அம்மா திடலில்  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  தலைமையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பேரணிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. எம்.ஜி.ஆரின் புகழை போற்றும் விதமாக எம்.ஜி.ஆர். நடித்த காவியத்திரைப்படங்களை செய்திதுறையின் மூலம் 7 அதிநவீன மின்னணு களவிளம்பர வாகனங்களை கொண்டு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் திரையிடப்பட்டு வருகிறது.
       அதன் ஒரு பகுதியாக நேற்று மதுரை உலகத்தமிழ் சங்க வளாகத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கவிதை, பேச்சு, கட்டுரை, நடனம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு கோபு குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் செங்கல்பட்டு மீனாட்சி ராகவன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
  அதன்பின் தமிழ்நாடு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட அளவில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்கள், 9 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சி மண்டலங்களில் உள்ள சுயஉதவிக்குழுக்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கலாச்சாரம், கோலம், நடனம், பாட்டு, நாடகம் ஆகிய போட்டிகள்    வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
        இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வருகின்ற 30.06.2017 அன்று நடைபெறவுள்ள எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பொற்கரங்களால் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
       இவ்விழாவில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா, மகளிர் திட்ட அலுவலர் அருள்மணி, உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கூடலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) நவநீதகிருஷ்ணன், உலகத்தமிழ் சங்க தனி அலுவலர் பசும்பொன், சுற்றுலா அலுவலர் பாலமுருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து