முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள் விழா

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் அவரது 91ஆவது பிறந்தநாள் விழா டி.பி.கே.ரோடு நற்பணி மன்ற அலுவலகத்தில் அதன் செயலாளர் மலரகம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ராம.மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா.சொக்கலிங்கம் “பதிவும் பகிர்வும்” என்ற தலைப்பில் பேசுகையில் 1944 ஆம் ஆண்டுக்கும் 1981க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் 4000 கவிதைகளையும் 5000த்திற்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும் எழுதியிருக்கிறார். கண்ணதாசனின் சொல்லாட்சிக்கு சான்றாக அமைந்த திரைப்படப் பாடல்கள் ஏராளம். சங்ககால தமிழ் இலக்கியத்தின் கற்பனைச் செறிவும் சொல்லாட்சியும் பாமரனைச் சென்றடையும் வகையில் திரைப்படப் பாடல்களில் அவற்றைப் புகுத்தியவர்.  தனது அனுபவங்களையே கவிதையாக்கியவர். அவற்றை திரைக்காட்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தேவைக்கும் பொருத்தமாக அமைத்தவர்.
  பறவையைக் கண்டான் விமானம் படைத்தான், பாயும் மீன்களில் படகினைக் கண்டான், எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான், எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான், மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்!
  உன்னையறிந்தால்-நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்! உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்-தலை வணங்காமல் நீ வாழலாம்!
  எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னைத் தனக்குள் வைத்திருக்கும் அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம்! இப்படி கருத்தான பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன.
  ஒலிநாடா பேச்சின் வாயிலாக ஒலிநாடா கேட்கும் ஆர்வத்தை விதைத்தவர் கவிஞர் கண்ணதாசன். “அர்த்தமுள்ள இந்துமத” த்தை கண்ணதாசன் குரலில் தம்புரா பின்னணியில் கேட்டுப்பாருங்கள். அவரது குரலும் தம்புராவும் மனதுக்கு நிம்மதி அளிக்கும். உலகமே உங்கள் வசப்பட்டது போல உணர்வீர்கள். வாலி உள்ளிட்ட பல கவிஞர்களது திரைப்பாடல்களைப் பலமுறை அவர்களது வீடு தேடிச் சென்று பிடித்த பரிசுகளை வழங்கிப் பாராட்டிய பண்பாளர் அவர்.

 கேள்விகளுக்கு சாதுர்யமாகவும் மதிநுட்பத்தோடும் சமயோசித்தத்தோடும் பதில் சொல்லும் ஆற்றலைப் பெற்றவர் கவியரசர். அது கேட்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.  ஆழ்ந்து யோசிக்க வைக்கும். திரைப்படப் பாடல்களில் எளிய நடை ஆன்மீகத்தில் ஆழமான சிந்தனை, அரசியலிலும் வாழ்விலும் திறந்த புத்தகம், இது தான் கவியரசர் குறித்த சுருக்கம். இதழியல் தான் அவர் விரும்பி நுழைந்தத் துறை. பின்னர் கதை வசனம், பாடல், நடிப்பு, தயாரிப்பு என பலதுறைகளிலும் தடம் பதித்தார்.
  திரைப்படப் பாடல்கள் இலக்கியமாகாது என்ற வாதம் தொடர்ந்து இருந்தாலும், இலக்கியத் தரத்தில் திரைப்படப் பாடல்களை எழுதியதில் முதலிடம் கண்ணதாசனுக்குத்தான். “காட்டுக்கு ராஜா சிங்கம் - கவிதைக்கு ராஜா கண்ணதாசன்” என காமராஜர் பாராட்டினார் என்றார்.
  கவிஞர்கள் மு.வீரமணி, சு.கோபாலகிருஷ்ணன் , பி.ஹரிகரன் புகழ் கவிதை வாசித்தனர். விழாவில் ஆர்.ரெங்கசாமி, கே.அண்ணாமலை, முனைவர் வீ.சுப்புராஜ், கவிஞர்கள் வாசகன், இரா.இரவி, வா.பழனிக்குமார் மற்றும் வீ.காளீஸ்வரன், ஜெ.ரவிசங்கர், முனைவர் ஆர்.கே.ரெங்கநாதன், என்.முனுசாமி, கே.ஆர்.தெட்சிணாமூர்த்தி, பி.பன்னீர்செல்வம், ஏ.சி.பாபுலால், சின்ராஜ், எஸ்.பாபு, ரெ.கார்த்திகேயன், சுரேந்திர பாண்டியன், முனைவர் ஜெயக்கொடி, எம்.செல்வம், ஏ.மோகன்குமார், என்.முத்தையா, நவாப்ஜான், வ.முத்து, கோ.ஏகாம்பரம், வி.எம்.ஜெயப்பிரகாஷ் கலந்து கொண்டனர். டி.ரமேஷ் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து