முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.54 கோடி மதிப்பீட்டில் போரூரில் புதிய மேம்பாலம் - எம்.ஜி.ஆர் பெயர் சூட்டி முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : போரூர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரூ.54கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று  திறந்து வைத்தார். வாகனப் போக்குவரத்தை தொடங்கி வைத்து அவரும் பாலத்தில் காரில் பயணம் செய்தார். இந்த பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது.

பிரச்சினைக்கு இடையில் ...

திறப்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புரட்சித் தலைவி அம்மா நல்லாசியோடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை நினைவு கொள்ளும் விதத்தில் பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் இந்தபாலம் பொது மக்களுடைய பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம், பல்வேறு பிரச்சினைக்கு இடையிலே இன்றைய தினம் நிறைவு பெற்று திறப்புவிழா காண்கின்றது.

பணிகள் நிறுத்தம்

கடந்த தி.மு.க. ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமலேயே இந்தப் பாலப் பணியை துவக்கி விட்டார்கள். புரட்சித் தலைவி அம்மா 2011-ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் இந்தபாலம் விரைவாக செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலே ஆணையிட்டார். அவரது ஆணைக்கிணங்க பாலப் பணியை துவக்குகின்ற போது, பாலத்திற்கு தேவையான நிலம் இல்லாத காரணத்தால் பாலப் பணி நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ரூ.54 கோடி செலவில் ...

நிலத்தினுடைய உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்ற காரணத்தால், தீர்ப்பை பெற்று இந்த பாலப் பணியை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தப் பாலம் அமைகின்ற சாலையின் அடிப்பகுதியிலே மாநகராட்சியின் குடிநீர் குழாய் செல்கிறது. அதை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவானது. பலமுறை ஒப்பந்தம் கோரியும் ஒப்பந்தம் எடுக்க யாரும் முன்வராத காரணத்தால் அதற்கு மாற்று ஏற்பாடாக அந்த நீர் குழாயை மாற்றி, அந்த குடிநீர் குழாய்க்கு எவ்வித பாதிப்பும் உண்டாகாத அளவுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மறு ஒப்பந்தம் இடப்பட்டது. ரூ. 54 கோடி செலவில் நிறைவு பெற்று, திறக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பெஞ்சமின், எம்.பி.க்கள் திருத்தணி அரி, வேணு கோபால், கே.என்.ராமச்சந்திரன், வெங்கடேஷ்பாபு, எம்.எல்.ஏ.க்கள் சிறுனியம் பலராமன், ஏழுமலை, அலெக்சாண்டர், சத்யா, விருகை ரவி, முன்னாள் அமைச்சர்கள் ஆவடி அப்துல் ரஹீம், மாதவரம் மூர்த்தி, ரமணா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் கணேசன், குப்பன், வேதாசலம், மற்றும் முகப்பேர் இளஞ்செழியன், நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் ராஜீவ்ரஞ்சன், கோதண்டராமன், தலைமை பொறியாளர் சுமதி, கலெக்டர் சுந்தரவள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து