முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா சிமெண்ட் விற்பனையை கண்காணிக்கும் மென்பொருள் - முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : அம்மா சிமெண்ட் விற்பனையை கண்காணிக்கும் வகையில் புதிதாக வாங்கப்பட்டுள்ள மென்பொருளின் பயன்பாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கிவைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான ஒரு துணை நிறுவனமாக தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு, 1994ஆம் ஆண்டு முதல் டான்செம் அரசு நிறுவனமாக விளங்குகிறது. டான்செமின் தற்போதைய ஆண்டு உற்பத்தி திறன் 7 இலட்சம் டன்களாகும். டான்செமின் சராசரி ஆண்டு விற்பனை அளவு 750 கோடி ரூபாயாகும். டான்செம் தற்போது 10 இலட்சம் டன் உற்பத்தி திறனுடைய புதிய மிக நவீனமான சிமெண்ட் ஆலை ஒன்றினை அரியலூரில் நிர்மாணித்து வருகின்றது. இதன் மூலம், அரசுத் துறையின் சிமெண்ட் உற்பத்தி ஆண்டு ஒன்றுக்கு 17 இலட்சம் டன்னாக உயரும்.

சொந்த வீடு கட்டும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க மக்கள் வீடு கட்டும் போது ஏற்படும் செலவினங்களை குறைக்கும் பொருட்டு, 2015ஆம் ஆண்டு ‘அம்மா சிமெண்ட்’ என்னும் திட்டம் துவக்கப்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்த இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக டான்செம் விளங்கி வருகிறது. வெளிச்சந்தையில் சிமெண்டின் விலை ரூ.350-லிருந்து ரூ.360 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மா சிமெண்ட், மூட்டை ஒன்றுக்கு ரூ.190 என்ற சலுகை விலையில் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.இத்தகைய சிறப்பு மிக்க அம்மா சிமெண்ட் திட்டத்தை செம்மைப்படுத்தும் பொருட்டு, 1 கோடி ரூபாய் செலவில், கணினி மூலம் மாநிலம் முழுவதும் நேரடி பதிவு, விற்பனை மற்றும் கண்காணிக்கும் முறையை செயல்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உயர்தர ஒருங்கிணைக்கப்பட்ட கணினி மென்பொருளை முதலமைச்சர் எடப்பாடி. பழனிசாமி துவக்கி வைத்தார்.

இந்த மென்பொருள் வாயிலாக, மாநிலம் முழுவதும் உள்ள கிட்டங்கிகளின் சிமெண்ட் இருப்புகள், தேவைகள், விற்பனை விவரங்கள், பயனாளிகளின் விவரங்கள், பயனாளிகளின் காத்திருப்போர் பட்டியல் போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அறிந்து கொள்ள வழிவகை ஏற்படுவதோடு, ஒளிவுமறைவின்றி பயனாளிகளுக்கு சீரான முறையில் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் சிமெண்ட் வழங்கிட இயலும். மேலும், அம்மா சிமெண்ட் திட்டத்தை திறம்பட கண்காணிக்க ஏதுவாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உதவி இயக்குநர்கள் (தணிக்கை), நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளர்கள் ஆகியோருக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் டான்செம் நிறுவனத்தால் வாங்கப்பட்ட 65 டேப் கருவிகளை வழங்கிடும் அடையாளமாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி . பழனிசாமி 10 அரசு அலுவலர்களுக்கு கருவிகளை வழங்கினார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து