முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்ரியன் திரை விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

நடிகர்-விக்ரம் பிரபு, நடிகை-மஞ்சிமா மோகன்,இயக்குனர்-எஸ்.ஆர்.பிரபாகரன்,இசை-யுவன் ஷங்கர் ராஜா,ஓளிப்பதிவு-சிவகுமார் விஜயன். திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா, அமைச்சர் போஸ்டர் நந்தகுமாரின் ஆதரவுடன் திருச்சியை ஆட்டிப்படைக்கிறார். என்னதான் ஊரையே ஆட்டிப்படைத்தாலும், வீட்டில் மகள் மஞ்சிமா மோகன், மகன் சவுந்தர்ராஜனுக்கு அன்பான தந்தையாக வந்து செல்கிறார். அப்பா ஊரையே ஆட்டிப்படைக்கும் ரவுடி, ஆனால் மகன் சவுந்தர்ராஜனோ ஒரு அப்பாவி.

ஒரு கட்டத்தில் சரத் லோகிதஸ்வாவின் வளர்ச்சி பிடிக்காத அமைச்சர் நந்தகுமார், அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். பின்னர் திருச்சியின் மற்றொரு ரவுடியான அருள் தாஸ் மூலமாக சரத் லோகிதஸ்வாவை கொன்று விடுகிறார். இதனால் சரத் லோகிதஸ்வா இடத்திற்கு அவருக்கு நெருக்கமான விஜய் முருகன் வருகிறார். விஜய் முருகனின் கீழ் அவரின் நம்பிக்கையான ரவுடியாக நாயகன் விக்ரம் பிரபு வருகிறார்.சரத் லோகிதஸ்வாவை இழந்த அவரது குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வராமல் விஜய் முருகன் பார்த்துக் கொள்கிறார்.

இவ்வாறாக ஒரு நாள் கல்லூரிக்கு சென்ற மஞ்சிமா மோகனை சிலர் தொந்தரவு செய்கின்றனர். இந்த விஷயத்தை மஞ்சிமாவின் அம்மா விஜய் முருகனிடம் கூறுகிறாள்.இதையடுத்து மஞ்சிமாவுக்கு பாதுகாப்பாக, விஜய் முருகனின் நம்பிக்கைக்கு பாத்திரமான விக்ரம் பிரபு வருகிறார். மறுநாளே மீண்டும் மஞ்சிமாவுக்கு தொந்தரவு வர, அங்கு வரும் விக்ரம் பிரபு அவர்களை தெறிக்க விடுகிறார். அவரது தைரியத்தை பார்த்து மஞ்சிமாவுக்கு அவர் மீது காதல் வருகிறது.

விக்ரம் பிரபு, மஞ்சிமா பின்னாலேயே அனைத்து இடங்களுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒருநாள் தனது காதலை விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமா வெளிப்படுத்த, அவளது காதலுக்கு விக்ரம் பிரபு மறுப்பு தெரிவிக்கிறார்.விடாது அவரை தனது வலையில் சிக்க வைக்கும் மஞ்சிமா, ரவுடி வாழ்க்கை வேண்டாம், நிம்மதியாக வேறு வாழக்கை வாழலாம் என அவருக்கு அறிவுரை கூற, மஞ்சிமாவின் அறிவுரையை கேட்டு விக்ரம் பிரபுவும் மஞ்சிமாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.இந்நிலையில், இவர்களது காதல் மஞ்சிமாவின் வீட்டுக்கு தெரிய வந்து, அவர்கள் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

விஜய் முருகனும் விக்ரம் பிரபுவிடம் மஞ்சிமாவை விட்டுவிட்டு வர அறிவுறுத்துகிறார். ஆனால் அவரது பேச்சை கேட்காமல் தனது காதலில் துடிப்புடன் இருக்கிறார் விக்ரம் பிரபு. தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவன் இப்படி துரோகம் செய்துவிட்டானே என்று விக்ரம் பிரபுவை கொல்ல விஜய் முருகன் திட்டமிடுகிறார்.

இதுஒருபுறம் இருக்க அருள்தாஸின் ஆள் ஒருவரை கொன்றதற்காக, விக்ரம் பிரபுவை பழிவாங்க அருள் தாஸின் ஆட்கள் சுற்றித் திரிகின்றனர். இதையடுத்து இந்த பிரச்சனைகளில் இருந்து விக்ரம் பிரபு மீண்டாரா? மஞ்சிமா மோகனுடன் சேர்ந்து நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை.விக்ரம் பிரபு அவருக்கே உண்டான சாயலில் நடித்திருந்தாலும், ஆக்ரோஷம், அமைதி என மாறி மாறி நடித்திருப்பது ரசிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளில் எப்போதும் போல மிரள வைக்கிறார். ரவுடியாக ஒரு பக்கத்தில் மிரட்டினாலும், காதல் காட்சிகளிலும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சிமா மோகன் திருச்சி பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரையில், குடும்பபாங்கான அழகான தேவதையாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். அவரது பேச்சும், பார்வையும் கவர்ந்து இழுக்கும்படியாக இருக்கிறது.சரத் லோகிதஸ்வா அவருக்கே உண்டான சாயலில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அருள்தாஸ், ரவுடியாக படம் முழுவதும் வந்து மிரட்டியிருக்கிறார்.

ரவுடிக்குண்டான குணநலங்களுடன் ரசிக்க வைத்திருக்கிறார்.படத்தின் போக்குக்கே காரணகர்த்தாவான போஸ்டர் நந்தகுமார் ஒரு அரசியல்வாதியாக மிரள வைக்கிறார். அரசியல்வாதிக்குண்டான கெத்துடன் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக வந்து செல்கிறார். அவரது முதிர்ச்சியான நடிப்பு ரசிகக்க வைக்கிறது. ஆர்.கே.விஜய் முருகன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.சவுந்தர்ராஜன் ஒரு பயங்கொள்ளியாக கதையின் போக்குக்கு ஏற்ப வந்து செல்கிறார். காட்சிக்கு பக்கபலமாக கவின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஐஸ்வர்யா தத்தாவிற்கு படத்தில் பேசும்படியான கதாபாத்திரம் அமையவில்லை.

ரியோ ஒருசில இடங்களில் வந்து செல்கிறார். யோகிபாபுவையும் படத்தில் பயன்படுத்தவில்லை. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வந்து செல்கிறார்.உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திருச்சியின் பின்புலத்தில் படத்தை உருவாகியிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருச்சியிலேயே படமாக்கப்பட்டிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. ஆக்‌ஷனுக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான் என்ற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். தாதாவாக ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து வாழ்வது தான் கெத்து என்ற எண்ணமே தவறு. கத்தி, சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை என்பதும் இருக்கிறது. அந்த வாழ்க்கையை வாழ்வது தான் சிறப்பு என்பதை உணர்த்தி இருக்கிறார். வசனங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக படத்தில் ரவுடிகள் பேசும் வசனங்கள் படத்திற்கு பலம்.


யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் வரும் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. "பாறை மேல தூறல் போல" பாடல் ஈர்க்கும்படி இருக்கிறது. சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவில் திருச்சி ரம்மியமாக காட்டப்பட்டுள்ளது.  மொத்தத்தில் `சத்ரியன்' அஞ்சாதவன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து