முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்கள் உட்பட 42 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : இலங்கை கடற்படையினரால் தற்போது சிறைபிடிக்கப்பட்ட 14 மீனவர்கள் உள்ளிட்ட 42 தமிழக மீனவர்களை உடனே விடுதலை செய்ய இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். மேலும் இலங்கை கடற்படை வசம் உள்ள 141 படகுகளையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

14 மீனவர்கள் கைது

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலான இலங்கை அரசின் தீய நடவடிக்கைகள் கண்டு இந்திய மீனவர்கள் சொல்லொண்ணா துயரும், வேதனையும், அச்சமும் அடைந்து இருப்பதை வேதனையோடு தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறையிலிருந்து 24-ம் தேதி இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற 11 மீனவர்களும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து இயந்திரப் படகில் சென்ற 3 மீனவர்களும் 24-ம் தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்கும் காங்கேசன் துறைக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இவர்கள் பாக். ஜலசந்தியில் பாரம்பரிய உரிமை உள்ள இடத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள்.

தொடர்ந்து வலியுறுத்தல்

இலங்கையில் நிலவி வரும் இந்தப் பிரச்னைக்கு ராஜீய தூதரக உறவுகள் மூலம் தீர்வு காணுமாறு இந்திய அரசாங்கத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. பாரம்பரியமாக மீன்பிடி உரிமையுள்ள பாக். ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் ஒழுங்குமுறையைக் குலைக்கும் செயலாகும்.

வாழ்வாதாரம் பாதிப்பு

மேலும் 2015 ஜனவரி மாதம் முதல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் எந்த ஒரு மீன்பிடி படகையும் இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் திருப்பி ஒப்படைக்கவில்லை. இப்படி படகுகள் திரும்ப மீனவர்கள் வசம் ஒப்படைக்காததால் இலங்கை அரசின் இந்த மனிதாபிமானமற்ற நிலைப்பாட்டால் மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதும் சித்ரவதை செய்யப்படுவதும் முடிவுக்கு வரவில்லை.

நேரடியாக பேச வேண்டும்

மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இப்பிரச்னைக்கு ஓர் நிரந்தர முடிவு காணப்படவேண்டும். இந்திய வெளியுறவுத்துறை மூலம், இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாக பேச வேண்டும். அதன் மூலம் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 42 மீனவர்களையும் 141 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து