முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

திங்கட்கிழமை, 26 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவம் சார்ந்த பி.டி.எஸ் ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. மருத்துவ மாணவர்கள் சேர்கையில், தமிழக மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

8-ம் தேதி கடைசிநாள்

இது குறித்து மருத்துவ மாணவர் தேர்வுக்குழு செயலாளர் செல்வராஜன் கூறியதாவது:-

2017-18-ம் ஆண்டிற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவம், பல்மருத்துவப் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பங்கள் இன்று காலை 10 மணி முதல் ஜூலை 7-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விற்பனை செய்யப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 8-ம் தேதி மாலை 5 மணி வரை செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், 162. பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்பாக்கம். சென்னை 10.என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விநியோகிக்கும் இடங்கள்

மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்கள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டிருத்தல் வேண்டும். சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, அரசு கி.ஆ.பெ. விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி, அரசு கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி, அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி, அரசு தேனி மருத்துவக் கல்லூரி, அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி, அரசு திருவாரூர் மருத்துவக் கல்லூரி, அரசு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி, அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரி, அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி, சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

ரூ.500 கட்டணம்

விண்ணப்பங்கள் மருத்துவக் கல்வி இயக்கம், மாணவர் சேர்க்கை குழுவில் வழங்கப்படாது. விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பு கையேட்டினை பெறுதவற்கு கட்டணமாக ரூ.500-க்கு செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்ககம் என்ற பெயரில் டி.டி.எடுத்துக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி.எஸ்.டி.பிரிவினர், அருந்ததியினர் சாதி சான்றிதழ்களின் நகலை சமர்பித்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தங்களுக்கான விண்ணப்பங்களையும், பிற விவரங்களையும் www.tnhealth.org., www. tnmedicalselection.org என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தமிழத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக 25 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

நீட் தேர்வு மதிப்பெண் ...

தமிழகத்தில் 22 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3050 இடங்கள் உள்ளது. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீதம் 456 இடங்கள் அளிக்கப்படும். மீதமுள்ள 2594 இடங்கள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அவற்றில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 2094 இடங்களும், ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 109 இடங்களும் ஆக 2,203 இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 401 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் ஒதுக்கப்படும்.

85 சதவீதம் ஒதுக்கீடு

அதேபோல் சுயநிதி மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் அரசுக்கு ஒப்படைக்கப்படும் 783 இடங்களில் 85 சதவீதம் அதாவது, 664 இடங்களுக்கு மாநிலத் தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கும், மீதமுள¢ள 15 விழுக்காடு அதாவது 119 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ மற்றும் பிற தேர்வு வாரியங்கள் மூலம் படித்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.

கலந்தாய்வு மூலம் ...

பல்மருத்துவப் படிப்பில் தமிழ்நாடு அரசு பல்மருத்துவக் கல்லூரி, ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் உள்ள 200 இடங்களில் 30 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், மாநில ஒதுக்கிட்டிற்கான 170 இடங்களில் மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 144 இடங்களும், பிற வாரியப்பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 26 இடங்களும் அளிக்கப்படும். சுயநிதி பல்மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கான 1,190 இடங்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 1,011 இடங்களும், பிற வாரியப்பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 179 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் விளக்கம்

இந்த ஆண்டு நீட் தேர்வு முறை அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? பிளஸ் 2 மார்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்களா? என்ற குழப்பம் நிலவி வந்தது. பெற்றோர், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்துக்கு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சமீபத்தில் சட்டசபையில் விளக்கம் அளித்தார். இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மேலும் தெரிவித்தாவது:-

அரசு மருத்துவ கல்லூரிகளை பொறுத்தவரை 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீடு வழங்கப்பட்டது போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில கலந்தாய்வு நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் 22 அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியையும் சேர்த்து மொத்தம் 3,050 இடங்கள் உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கிட்டு இடங்கள் 456 ஆகும். மீதமுள்ள 2594 இடங்கள் தற்போது வெளியிட்டுள்ள அரசாணைப்படி 85 சதவீத இடங்கள் தமிழக சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் கலந்தாய்வு தொடங்கும் நாள் வரை கிடைக்காவிட்டால் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாநில தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
பாதிப்பு ஏற்படாது

இந்த ஒதுக்கீட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 2094 இடங்களும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் உள்ள 150 இடங்களையும் சேர்த்து 2203 இடங்களும் அடங்கும்.மீதமுள்ள 15 சதவீத 391 இடங்கள் சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ, பிற தேர்வு வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும். சுயநிதி மருத்துவ கல்லூரியை பொறுத்தவரை மாநில அரசால் ஒப்புதல் பெற்ற 10 கல்லூரிகளில் உள்ள 783 இடங்களில் 667 இடங்கள் மாநில வாரியத்தில் ஒப்படைக்கப்படும். மீதமுள்ள 119 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். இதனால் மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து