முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்த திட்டம்: சிரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அதிபர் ஆசாத் தலைமையிலான சிரியா அரசு கிளர்ச்சியாளர்கள் மீது மீண்டும் ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

உள்நாட்டு சண்டை ...

சிரியா நாட்டின் அதிபராக பசர் அல் ஆசாத் இருந்து வருகிறார். அவருக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருகிறார்கள். இதனால் அங்கு 6 ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக செயல்படுபவர்கள் புரட்சி படை ஒன்றை தொடங்கி போரிட்டு வருகிறார்கள். இந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிதது வருகிறது. அதே நேரத்தில் அரசுக்கு ரஷியா ஆதரவாக உள்ளது.

சிரியா போர்

உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பல பகுதிகள் புரட்சிப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இரு பகுதிகளையும் மீட்பதற்கு சிரியா ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

ராணுவம் தாக்குதல்

கடந்த ஏப்ரல் மாதம் புரட்சிப்படையினர் கட்டுப்பாட்டில் இருந்த கான்ஷேக்வுன் என்ற நகரை மீட்பதற்கு ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது ரசாயன குண்டுகளை வீசியது. நரம்பு மண்டலத்தை உடனடியாக பாதித்து உயிரை பறிக்கும் மிக மோசமான குண்டுகள் வீசப்பட்டன.

59 குண்டுகள்

இதில் புரட்சிப்படை வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ரசாயனம் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறி ‌ஷயாரத் விமானப்படை தளத்தையும் தாக்கியது. மத்திய தரை கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து 59 குண்டுகள் வீசப்பட்டன.

அமெரிக்கா கண்டனம்

இந்த நிலையில் மீண்டும் சிரியா ரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறி இதற்கு அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்வதேச சமுதாயத்தின் எச்சரிக்கையையும் மீறி சிரியா தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. எந்த நேரத்திலும் இந்த தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கிறோம். மீண்டும் ரசாயன ஆயுதத்தை பயன்படுத்தினால் அதற்கு சரியான பதிலடி கொடுப்போம். கடும் விளைவுகளை சிரியா சந்திக்க வேண்டியது வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து