முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரபிரதேச அரசின் 100 நாள் ஆட்சி: சாதனை பட்டியலை வெளியிட்ட முதல்வர் யோகி ஆதித்யாநாத்

செவ்வாய்க்கிழமை, 27 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

லக்னோ  :  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசின் 100 நாள் ஆட்சியில் நடைபெற்ற சாதனை பட்டியலை முதல்வர் யோகி ஆதித்யாநாத் நேற்று வெளியிட்டார்.

கடன் தள்ளுபடி

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க. அங்கு ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யாநாத் அங்கு பல்வேறு மக்கள்நல திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார். அதில் ஒருகட்டமாக தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு விவசாயிகளின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் வாங்கிய வங்கிக் கடன் தொகையான 3.88 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய அம்மாநில அரசு தீர்மானித்துள்ளது.

புதிய அறிக்கை வெளியீடு

இந்நிலையில், முன்னர் மாநிலத்தை ஆண்ட சமாஜ்வாதி கட்சியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற குளறுபடிகள் தொடர்பாக புதிய அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை 25-ம் தேதி பிற்பகல் செய்தியாளர்கள் முன்னிலையில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் வெளியிட்டார்.

சாதனை பட்டியல்

மேலும், மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை பா.ஜ.க. ஏற்ற 26-3-2017-க்கு பின்னர் கடந்த 100 நாட்களில் ஒவ்வொரு அமைச்சகத்தின் சார்பாக வெளியான அறிவிப்புகள் மற்றும் செய்யப்பட்ட நலத்திட்டப் பணிகள் தொடர்பான சாதனை பட்டியல் அடங்கிய கையேட்டினை யோகி ஆதித்யாநாத் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய யோகி ஆதித்யாநாத் கடந்தகால ஆட்சியில் மாநிலத்தின் முன்னேற்றம் பின்னுக்கு தள்ளப்பட்டு, லஞ்ச ஊழலும் கொள்ளையும் அரங்கேறியதாக குற்றம்சாட்டினார்.  ஒரு மாநிலத்தின் வளர்ச்சியானது, விவசாயிகளின் நல்வாழ்வை ஒட்டியே அமைந்திருக்கும் என்பதால் விவசாயிகள் தொடர்பான நலத்திட்டங்களுக்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும்.

ரூ.517 கோடி ...

எங்கள் அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்னர் கரும்பு விவசாயிகளுக்கு செலுத்தப்படாமல் இருந்த பாக்கி தொகையான 22 ஆயிரத்து 517 கோடி ரூபாயை வழங்கி இருக்கிறோம். உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தி செல்ல நாங்கள் சபதம் ஏற்றுள்ளோம். இந்த ஆண்டு முழுவதும் ஏழை எளியவர்களுக்கான நலத்திட்ட ஆண்டாக 'கரீப் கல்யான் வர்ஷ்' அமையும் என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து