முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் வேட்பு மனு தாக்கல்

புதன்கிழமை, 28 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜனாதிபதி  தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார் நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பிகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்த் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில், தலித் தலைவர் ஜகஜீவன் ராமின் மகளும் மக்களவை முன்னாள் சபாநாயகருமான மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய டெல்லியில் புதன்கிழமை காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் உள்ள செயலர் தலைவர் அலுவலகம் (Secretary General's office) வந்தார் மீரா குமார். அப்போது அவருடன் சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் உடன் சென்றனர்.

வேட்பு மனுவைத் தாக்கல் செய்த மீரா குமார் 11.30 மணிக்கு வெளியே வந்தார். வேட்பு மனுத் தாக்கலின்போது ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்களும், இடதுசாரித் தலைவர்களும் உடனிருந்தனர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''மகாத்மா காந்தி எதற்காகப் போரிட்டாரோ, அதற்காகத்தான் நாங்களும் போரிட்டு வருகிறோம்'' என்றார்.

முன்னதாக நேற்றுமுன்தினம் அவர் கூறியபோது, ''இத்தேர்தலை இரு தலித் வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டியாகக் கருதக் கூடாது. இத்தேர்தலில் சாதி அடிப்படையில் நான் போட்டியிடவில்லை. கொள்கை அடிப்படையிலே போட்டியிடுகிறேன்.

இதற்கு முன் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில் வேட்பாளர்களின் சாதி குறித்து விவாதிக்கப்படவில்லை. அவர்களின் பண்புகள், தகுதிகள் மற்றும் சாதனைகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன. ஆனால் தலித் போட்டியிடும்போது, அவரது சாதி முதலில் விவாதிக்கப்படுகிறது. அதன் பிறகே அவர்களின் பண்புகள் விவாதிக்கப்படுகின்றன. இந்நிலை மாறவேண்டும். குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளேன்'' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து