முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணலை பெற இணையத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் - முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 28 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கு தேவையான மணலை பெற இணையத்தில் முன்பதிவு செய்யும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மணல் உபயோகிப்பாளர்களுக்கு எளிதில் கிடைத்திட ஏதுவாக “தமிழ்நாடு மணல் இணையசேவை” (www.tnsand) இணைய தளத்தையும், செல்லிடப்பேசி செயலியையும் துவக்கி வைத்தார்.

முன்பதிவு செய்து ...

உபயோகிப்பாளர்களுக்கு மணல் தங்கு தடையின்றி குறைந்த விலையில் கிடைத்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், பொதுப் பணித்துறையால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக, தற்போது இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் வாயிலாக, பொதுமக்கள் மற்றும் லாரிஉரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உபயோகிப்பாளர் கையேடு

இதன்மூலம் மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக் கொள்ளலாம். மணல் பெற்றுக் கொள்வதற்கு, கணினி மென்பொருள் மற்றும் செல்லிடப்பேசி செயலியை பயன்படுத்துவது குறித்து, பொதுமக்கள், லாரி உரிமையாளர்கள், அரசுமணல் குவாரிகளில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுப்பணித்துறையின் வாயிலாக 28.6.2017 முதல் 30.6.2017 வரை பயிற்சியளிக்கப்படும். இதற்கென தனியாக ஓர் உபயோகிப்பாளர் கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் பெற்றுக் கொண்டார்.

ஜூலை 1 முதல் நடைமுறைக்கு ...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட “தமிழ்நாடு மணல் இணைய சேவை” 1.7.2017 முதல் உபயோகிப்பாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும், 1.7.2017 முதல் பொதுமக்கள், லாரிஉரிமையாளர்கள் தங்களுடைய மணல் தேவையை இணையசேவை மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ள முடியும். இதனால், உபயோகிப்பாளர்களின் மணல்தேவை பூர்த்தி செய்யப்படுவதுடன், மணல் தங்கு தடையின்றி குறைவான விலையில் கிடைக்கவும் வழிவகை ஏற்படும்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், நீர்வளஆதாரத் துறைமுதன்மைத் தலைமைப் பொறியாளர் பக்தவத்சலம், மற்றும் அரசுஉயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து