முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆதார் எண் பதிவு மையங்கள் அரசு கட்டிடங்களில் செயல்பட உத்தரவு

திங்கட்கிழமை, 3 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தனியார் இடங்களில் செயல்பட்டு வரும் ஆதார் எண் பதிவு மையங்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் அரசு கட்டிடங்களில் செயல்பட வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அங்க அடையாளத்துடன் கூடிய 12 இலக்க அடையாள எண் (ஆதார்) வழங்கும் பணிக்காக யுஐடிஏஐ நிறுவப்பட்டது. இதற்கான பணிகளில் தனியார் முகமைகளும் ஈடுபட்டுள்ளன. இவை தனியார் இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இதுவரை 115 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கெனவே ஆதார் எண் பெற்றவர்களும் திருத்தம் செய்வதற்காக இந்த முகமைகளை நாடி வருகின்றனர்.

இந்நிலையில், யுஐடிஏஐ தலைமை செயல் அதிகாரி அஜய் பூஷண் பாண்டே, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடந்த ஜூன் 28-ம் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

தனியார் இடங்களில் செயல்படும் ஆதார் எண் பதிவு மையங்களைக் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளதாகவும் சில நேரங்களில் மூடி இருப்பதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, தனியார் இடங்களில் செயல்பட்டு வரும் ஆதார் எண் பதிவு மையங்களை, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அரசு அலுவலக கட்டிடங்களுக்கு மாற்றும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இந்த மையங்கள் அனைத்தும் மாவட்ட அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலக வளாகங்களில் மட்டுமே இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இதுதவிர, வங்கிகள், வட்ட அலுவலகங்கள் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான எந்த ஒரு கட்டிடத்துக்கும் மாற்றம் செய்யலாம். அப்போதுதான் ஆதார் மையங்களை அரசு அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்க முடியும். பொதுமக்களுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும். மேலும் மாநில அரசுகள் கூட, தங்கள் ஊழியர்களைக் கொண்டு அரசு அலுவலக வளாகத்தில் ஆதார் பதிவு மையங்களை தொடங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் நாடு முழுவதும் 25 ஆயிரம் ஆதார் எண் பதிவு மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பான், ஜிஎஸ்டி, வங்கி கணக்குகள், பாஸ்போர்ட் மற்றும் சொத்து பதிவு உள்பட பெரும்பாலான அரசு சேவைகளைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து